

மதுரை வேளாண்மை கல்லூரியில் மண் மற்றும் தாவரங்களில் நுண்ணூட்ட சத்துகளை ஆராய்வதற்கும், அதிகப்படுத்தவும் எக்ஸ் கதிரியக்க வேளாண் கருவி (X ray Fluorescence Spectrometer) ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளில் காணப்படும் மண் மற்றும் தாவரங்களில் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் அதிகளவில் இருக்கின்றன. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் ஏற்படுகின்றன. காய்கறி, பழங்கள், தானியங்கள் சாப்பிடும் வசதி படைத்தவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுவதில்லை. நுண்ணூட்ட சத்துக்கள் (நுண் தனிமங்கள்) அதிகம் இருக்கும் உணவுப்பொருட்களை உருவாக்க உலகளவில் வேளாண் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடக்கின்றன. வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கல்லூரிகளிலும் புதிய ரக தானியங்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதற்காக, மதுரை வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரிக்கு, ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ. 53 லட்சம் மதிப்பிலான புதிய எக்ஸ் கதிரியக்க வேளாண் கருவி வாங்கப்பட்டது.
இதன் செயல்பாடுகள் பற்றிய கருத்தரங்கம் நேற்று வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், தமிழ்நாடு, கேரளம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகள், உதவிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதை வேளாண் கல்லூரி முதல்வர் என்.ரகுபதி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து உயிர் தொழில்நுட்ப துறைத் தலைவர் பேராசிரியர் செந்தில் கூறியது: உணவு பட்டியலில் எதிர்காலத்தில் சிறுதானியங்களின் பங்கு அதிகமாக இருக்கும். அதனால், சிறுதானியத்தில் நுண்ணூட்ட சத்துகளை அதிகரிக்க ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த ஆராய்ச்சிக்கு, எக்ஸ் கதிரியக்க வேளாண் கருவி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த கருவி, சிறுதானியங்களில் இருக்கும் நுண்ணூட்ட சத்துகளை நுட்பமாக அளவிடலாம். இதன்மூலம் நுண்ணூட்ட சத்து குறைபாடுகளை போக்கலாம். இரும்பு, துத்தநாக சத்துகளை தாவரங்களில் அதிகப்படுத்தலாம் என்றார்.