“பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் குறித்து...” - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

“பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் குறித்து...” - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
Updated on
1 min read

மதுரை: ‘பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை’ என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 6 பேரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர். இததனிடையே, மதுரை ஞான ஒளிவுபுரம் பகுதியில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில்:

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தியாகியின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்வது குறித்து தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் இரண்டு நாட்களாக ராணுவத்தினரை தொடர்பு கொண்டு வந்தேன். அந்த தியாகியை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேசுவதற்கு இது சரியான தருணம் இல்லை.

பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை. பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை பேசுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு மதுரையை சேர்ந்த பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை விமான நிலையத்தின் வெளியே ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும் வழியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாகனத்தை வழிமறித்து தாக்க முற்பட்ட பாஜக குண்டர்களின் செயல் மிகவும் கண்டிக்கதக்கது. இந்த வன்முறை வெறியாட்டம் ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல. பாஜகவின் இந்த அநாகரிக செயலுக்கு திமுக சார்பில் சட்டப்பூர்வமாக தகுந்த பதில் அளிக்கப்படும்." இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in