Published : 13 Aug 2022 05:03 AM
Last Updated : 13 Aug 2022 05:03 AM

பெண்களுக்கான சலுகை பயணத்தால் வருவாய் பற்றாக்குறை - உதிரிபாக கொள்முதலுக்கு நிதியின்றித் திணறுகிறதா மாநகர போக்குவரத்துக் கழகம்?

சென்னை: பெண்களுக்கான சலுகைப் பயணத்தால் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வருவாய்ப் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், உதிரி பாகங்கள் வாங்குவதற்குக் கூட போதிய நிதியின்றி நிர்வாகம் திணறிவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு திமுக ஆட்சியமைத்தவுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்தினார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

பெண்கள் வரவேற்பு

இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 62 சதவீதமாக அதிகரித்தது.

இந்நிலையில், இலவசப் பயணத்தால் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 3,454 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 40 சதவீதம், அதாவது 1,559 பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகளாகும். ஒரு பேருந்தில் தினமும் சராசரியாக ரூ.6,500 வசூலாகும். ஆனால், பெண்கள் இலவசமாகப் பயணிப்பதால், ரூ.2,600 மட்டுமே கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

பராமரிக்க இயலவில்லை

பேருந்துகளில் அன்றாடம் வசூலாகும் தொகையைக் கொண்டே, உதிரிபாகங்கள் வாங்கப்படுகின்றன. வருவாய் குறைந்ததால், உதிரி பாகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, பேருந்துகளைப் பராமரிக்க முடியாமலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறும்போது, “பேருந்துகளில் வசூலாகும் சொற்ப தொகையைக் கொண்டே டீசல், டயர் மற்றும் அத்தியாவசிய உதிரிப் பாகங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால், இன்ஜின் ஆயில், கிரீஸ், காட்டன், மண்ணெண்ணெய், பிரேக்குக்கான ஸ்லாக் அட்ஜெஸ்டர் உள்ளிட்டவை பற்றாக்குறை யாகவே உள்ளன.

பழைய உதிரிபாகங்களைப் பயன்படுத்தும்போது, பேருந்தின் முழுக் கட்டுப்பாடு ஓட்டுநருக்கு கிடைக்காது. மேலும், மற்ற பாகங்களும் விரைவில் பழுதாகிவிடும். மண்ணெண்ணெய் பற்றாக்குறையால், டீசலிலேயே ஓவர் ஆயில் பார்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது” என்றனர்.

அமைச்சர் விளக்கம்

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறும்போது, “போக்குவரத்துக் கழகங்கள் கடனில் இருப்பதும், டீசல் விலை உயர்வால் வருவாய் இழப்பு ஏற்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றுதான்.

போக்குவரத்து என்பது, சேவைசார்ந்த துறை என்பதால் மக்களுக்கு இலவச பயண சேவையை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, டீசல் விலை உயர்ந்த போதிலும், கட்டணத்தை உயர்த்தாமல் பேருந்துகளை இயக்கி வருகிறோம். போக்குவரத்துக் கழகங்களுக்கு உதிரி பாகங்கள் தொடர்ச்சியாக கொள்முதல் செய்யப்படுகின்றன. பெரிய அளவுக்குத் தட்டுப்பாடு இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த போக்குவரத்துக் கழகங்களில் தற்போதுதான் படிப்படியாக சீர்திருத்தம் செய்து வருகிறோம். போக்குவரத்துக் கழகங்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x