

மதுரை: மதுரை அழகர்கோவிலில் நடந்த ஆடித் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை அழகர்கோவில் ஆடிப் பெருந்திருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. சுந்தர்ராஜப் பெருமாள் தேவி, பூதேவியருடன் பல்வேறு வாகனங்களில் தினமும் வலம் வந்து அருள் பாலித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை 4.15 மணியளவில் சிறப்பு அபிஷேகத்துக்குப் பிறகு சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.
காலை 6.25 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகப் பங்கேற்று `கோவிந்தா, கோவிந்தா' என கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கரோனா தொற்று குறைந்ததால் இந்த ஆண்டு கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவில் இதுவரை இல்லாத அளவு பக்தர்கள் பங்கேற்றனர்.
18-ம்படி கருப்பண சுவாமி சன்னதி நிலை கதவுகளுக்கு நேற்றிரவு சந்தனம் சாத்துப்படி நடந்தது. இன்று புஷ்ப சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. நாளை திருவிழா நிறைவடைகிறது.