Published : 13 Aug 2022 07:29 AM
Last Updated : 13 Aug 2022 07:29 AM

சட்டத்துறையில் பெரும் சாதனை படைத்த பேராசிரியர் கு.சிவமணி காலமானார்

பேராசியர் கு.சிவமணி

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் சட்டத்துறையில் பெரும் சாதனை படைத்த பேராசிரியர் கு.சிவமணி (90) புதுச்சேரியில் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை கருவடிக்குப்பத்தில் நடக்கிறது.

தமிழக அரசின் தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மொழிபெயர்ப்பாளராகவும், புதுச்சேரி அரசின் சட்டத்துறையில் மொழிபெயர்ப்பு அலுவலராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர் பேராசிரியர் கு.சிவமணி. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றியவர். புதுவை மொழியியல் நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராக விளங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகரமுதலி சீராய்வுத் திட்டத்தின் பதிப்பாசிரியராக விளங்கியவர்.

தமிழ் ஆங்கில மொழிகளில் பெரும்புலமை பெற்ற பேராசிரியர் கு.சிவமணி இந்திய அரசுக்காக இந்திய அரசமைப்பு (அதிகாரமுறைத் தமிழாக்கம்) மொழிபெயர்ப்பினைச் செய்தவர். சட்டச் சொல் அகராதி (சென்னைப் பல்கலைக்கழகம்), சட்ட - ஆட்சியச் சொற்களஞ்சியம் (புதுவை அரசு வெளியீடு) ஆகிய அகராதிகளை உருவாக்கியவர்.

புதுச்சேரியில் வசித்து வந்த பேராசிரியர் கு.சிவமணி வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை காலமானார். அவரது உடல், லாஸ்பேட்டை சுப்ரமணியர் கோயில் குறுக்கு தெருவில் அவர் வசித்த வாடகை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் வாழ்ந்த புலவர் கரந்தை சிவகுப்புசாமி, பருவதத்தம்மைக்கு மகனாக 01.08.1932-ல் கு.சிவமணி பிறந்தார். 1950-52-ல் இடைநிலை வகுப்பையும், 1953-55 இல் தமிழ்ச் சிறப்பு வகுப்பையும், 1958-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தை பெற்றவர். பி.ஜி.எல். சட்டப்படிப்பைச் சென்னைச் சட்டக் கல்லூரியில் பயின்றவர். முனைவர் பட்ட ஆய்வைத் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தியவர்.

தமிழ்ச் சேவை

தஞ்சை கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும், நெல்லை மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கலைக் கல்லூரியிலும் கல்லூரி முதல்வராகவும், குமாரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணி செய்தவர். சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு, தேர்வுக்குழு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குழுக்களில் பணிபுரிந்துள்ளார்.

1965-ல் கரந்தைப் புலவர் கல்லூரியை மூடும் சூழல் உருவானபொழுது அதனைத் தடுத்து நிலைநிறுத்திய பெருமை பேராசிரியர் கு.சிவமணிக்கு உண்டு. 1969-ல் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இயங்கிய வள்ளுவர் செந்தமிழ்க்கல்லூரி, ஏற்புடைமை இழந்த சூழலில், திருவள்ளுவர் கலைக் கல்லூரியாக உயிர்ப்பித்து வளர்த்தார்.

சிதறிக் கிடந்த தமிழ்க் கல்லூரிகளை ஒன்று திரட்டி, தமிழக மொழிக் கல்லூரிகள் மன்றம் உருவாகக் காரணமாக அமைந்தவர்.

தமிழ்க் கல்லூரிகளைக் கலைக் கல்லூரிகள்போல் கருதவேண்டும் எனவும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு ஏனைய பேராசிரியர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்க வேண்டும்; தமிழ் வித்துவான் பட்டத்துக்குப் பதிலாக பி.லிட் பட்டம் வழங்கவேண்டும் என அரசுடன் பேசி, தமிழ்க் கல்லூரிகளின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்.

பேராசிரியர் சிவமணியின் முதல் மனைவிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி மறைவுக்குப் பிறகு இரண்டாவதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இறுதிச் சடங்குகள் இன்று மாலை கருவடிக்குப்பம் இடுகாட்டில் நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x