Published : 21 Oct 2016 01:40 PM
Last Updated : 21 Oct 2016 01:40 PM

சிப்பெட் தலைமையகத்தை மாற்றும் முடிவை கைவிடுக: ராமதாஸ்

சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற வேண்டிய தேவையே இல்லை. சிப்பெட் தலைமையகம் சென்னையில் தான் செயல்பட வேண்டும் என பதிவு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் கடந்த 48 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாக திகழும் இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை அரசியல் காரணங்களுக்காக டெல்லிக்கு மாற்ற அரசு துடிப்பது கண்டிக்கத்தது ஆகும்.

சிப்பெட் எனப்படும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மிகப்பெரிய வரலாறும், வளர்ச்சியும் கொண்டது. தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்த போது, பெருந்தலைவர் காமராஜரின் வழிகாட்டுதலில் இந்த நிறுவனம் சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டது.

சென்னையில் மட்டும் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ச்சியடைந்து இப்போது 28 இடங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் 11 இடங்களில் இதன் கிளைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டு, விரைவில் அவை செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன. இடையில் சில காலம் இழப்பை சந்தித்தாலும் 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு வருவாய் செலவின இலக்குகளை சிப்பெட் நிறுவனம் எட்டி வருகிறது. ஒன்பதாவது திட்ட காலத்தில் சிப்பெட் நிறுவனம் ரூ.375 கோடியை ஈட்டியதுடன், ரூ.180 கோடி உபரி நிதி வைத்துள்ளது. அரசின் நிதி உதவியை பெறாமலேயே ஆறு மற்றும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. எனவே, சிப்பெட் தலைமையகத்தை மாற்ற வேண்டிய தேவையே இல்லை. அதுமட்டுமின்றி சிப்பெட் தலைமையகம் சென்னையில் தான் செயல்பட வேண்டும் என பதிவு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக சிப்பெட் தலைமையகத்தை மாற்றுவதற்கான காரணங்கள் எதுவுமே இல்லாத நிலையில், நிர்வாக வசதிக்காக தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற மத்திய உரம் மற்றும் ரசாயன அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

லக்னோ, அகமதாபாத் போன்ற வட இந்திய மையங்களில் புதிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமானால் அதற்காக சென்னை வந்து ஒப்புதல் பெறுவது கடினமான இருக்கிறது என ஏற்கமுடியாத காரணத்தை மத்திய அரசு கூறுகிறது. லக்னோ, அகமதாபாத் மையங்களிலிருந்து சென்னைக்கு வந்து ஒப்புதல் பெறுவது கடினம் என்றால், தலைமை அலுவலகம் டெல்லிக்கு மாற்றப்படும் பட்சத்தில் சென்னை, மதுரை, கொச்சி போன்ற நகரங்களிலுள்ள சிப்பெட் மையங்கள் டெகுச் சென்று ஒப்புதல் பெறுவது மட்டும் மிகவும் எளிதானதா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

மேலும், டெல்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் செயல்படும் நிலையில், சிப்பெட் நிறுவனம் டெல்லிக்கு மாற்றப்பட்டால் அதற்கும் அதேநிலை தான் ஏற்படும்.

சிப்பெட் நிறுவனத்தின் சென்னை தலைமையகம் உலகத்தர வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கிளைகளுடனும் காணொலி முறையில் கலந்தாய்வு நடத்தும் வசதி உள்ளது. தலைமையகம் டெல்லிக்கு மாற்றப்பட்டால், அங்கு இதேபோன்ற வசதிகளை ஏற்படுத்த ரூ.600 கோடிக்கு மேல் செலவழிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு செலவழித்தால் சிப்பெட் நிறுவனத்திற்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும். இது முகமது பின் துக்ளக் தமது நாட்டின் தலைநகரை டெல்லியிலிருந்து தவுலதாபாத்துக்கு மாற்றுவதற்காக நாட்டின் வளத்தை செலவிட்டு சீரழித்ததற்கு ஒப்பானதாகவே அமையும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை மாற்றுவதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு பொருளாதார காரணங்களும், அரசியல் காரணங்களும் உள்ளன என்பதும் உண்மை. சிப்பெட் நிறுவனத்தை நிர்வகிக்கும் மத்திய உரம் மற்றும் ரசாயன அமைச்சராக இருப்பவர் கர்நாடகத்தை சேர்ந்த அனந்தகுமார் ஆவார். காவிரி சிக்கலில் தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்த அவர், தமிழகத்தை பழிவாங்கும் நோக்குடன் தான் சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றத் துடிக்கிறார். அதுமட்டுமின்றி, எதிர்கால வளர்ச்சிப் பணிகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள ரூ.150 கோடியை கைப்பற்ற வேண்டும் என்பதும் இன்னொரு காரணமாகும்.

தமிழகத்தின் மிகப்பெரிய அடையாளமாக இருந்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை என்.எல்.சி இந்தியா என்று மாற்றி அடையாளத்தை அழித்த மத்திய அரசு, இப்போது தமிழகத்தின் இன்னொரு அடையாளமான சிப்பெட் தலைமையகத்தை பறித்துச் செல்லத் துடிக்கிறது.

இச்சிக்கல் இவ்வளவு தீவிரமான பிறகும் தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த எதிர்ப்பும் வராதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை கடந்து சிப்பெட் தலைமையகத்தை தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டும். தமிழகத்தின் இந்த உணர்வை மதித்து சிப்பெட் தலைமையகம் சென்னையில் தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x