Published : 15 Oct 2016 02:52 PM
Last Updated : 15 Oct 2016 02:52 PM

கோவை அரசு மருத்துவமனை கழிப்பறையில் மது பாட்டில்களை வீசும் குடிமக்கள்: முகம் சுளிக்கும் பொதுமக்கள்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிப்பறையில் சிலர் மது பாட்டில்களை வீசிச் செல்வதால், கழிப்பறையை பயன்படுத்துவோர் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, நடுத்தர மக்களுக்கான மருத்துவமனையாகத் திகழும் இங்கு, தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மேலும், உள்நோயாளிகளாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த மருத்துவமனையைத் தொடங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதையொட்டி, அங்கு பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், தினமும் ஏராளமானோர் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். மேலும், நோயாளிகளைப் பார்ப்பதற்காகவும், அதிகமானோர் வருகின்றனர்.

இங்குள்ள பிரசவ வார்டு அருகே கட்டணக் கழிப்பிடம் செயல்படுகிறது. இப்பகுதியில் பிரசவ வார்டு, மருத்துவ வார்டு மற்றும் பிரேதப் பரிசோதனை அறை உள்ளிட்டவை உள்ளன. இதனால் இந்தக் கழிப்பறையை ஏராளமானோர் தினமும் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், இந்தக் கழிப்பறைக்கு வரும் சிலர், மது பாட்டில்களை எடுத்து வந்து குடித்துவிட்டு, வெறும் பாட்டில்களை கழிப்பறையிலேயே வீசிச் செல்கின்றனர். சிலர் கழிவறைத் தொட்டியிலேயே பாட்டில்களை வீசிச் செல்வதால், அதை அடைத்துக் கொள்கின்றன. இதனால் கழிப்பறைக்குச் செல்லும் பொதுமக்கள், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், சிலர் கழிப்பறைக்குள்ளேயே பீடி, சிகரெட்டுகளையும் குடிப்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கழிப்பறையைப் பாராமரித்துக் கொண்டிருந்த வரிடம் கேட்டபோது, “இரவு நேரத்தில் சிலர் மது பாட்டில்களைக் கொண்டுவந்து கழிப்பறையிலேயே குடித்துவிட்டு, உள்ளே வீசிச் செல்கின்றனர். இதனால் கழிப்பறைத் தொட்டிகள் அடைத்துக் கொள்கின்றன. நாங்கள் மிகுந்த சிரமப்பட்டு பாட்டில்களை அகற்றுகிறோம்.

பெண்கள் சிலரும் கழிப்பறையில் மது அருந்துவது வேதனைக்குரியது. கழிப்பறைக்குள் செல்லும் ஒவ்வொருவரையும் சோதனை யிடுவதும் சாத்தியமில்லாதது. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்தான், தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் எட்வின்ஜோவிடம் கேட்டபோது, “மருத்துவமனை வளாகத்தில் புகைபிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என்று எழுதி வைத்துள்ளோம். மேலும், தீவிர கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். எனினும், மது பாட்டில்களையும், பீடி, சிகரெட்டையும் மறைத்து எடுத்துவந்து, கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் அருந்துவோரால், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம். பொது சொத்தான மருத்துவமனையின் தூய்மையைப் பராமரிக்க, பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்” என்றார்.

பொது இடங்களில் குப்பை, கழிவுகளைக் கொட்டுவதே தவறு. அதுவும், மருத்துவமனை போன்ற இடங்களில் தூய்மையைப் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். மருத்துவமனை வளாகத்தில் மது அருந்துவதுடன், கழிப்பறையில் மது பாட்டில்களை வீசிச் செல்வது மிகவும் தவறானது. இதனால் நோயாளிகளும், பார்வையாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டியது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x