

சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் விடுவதை தடுக்க, உள்ளாட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, உரிமம் இன்றி தனியார் கழிவுநீர் லாரிகள் இனி இயங்க முடியாது. விதிகளை மீறினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். உரிமம் இடைநீக்கம் செய்யப்படும்.
சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட போரூர், அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள மழைநீர் வடிகால்களில், விதிகளை மீறி கழிவுநீர் லாரிகள் கழிவுநீரை திறந்து விடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக நாளிதழ்களில் செய்திவெளியானது.
இதை அடிப்படையாக கொண்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்தது.
இதையடுத்து, பசுமை தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில் மலக்கசடு மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பாக தமிழக அரசு புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. அதை செயல்படுத்த, சென்னை குடிநீர் வாரிய சட்டம், மதுரை மற்றும் கோவை மாநகராட்சிகள் சட்டம், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்ளாட்சி அதிகாரிகள் கூறியதாவது: அரசின் புதிய சட்டத் திருத்தத்தின்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளில் குடியிருப்பு அல்லது வணிக கட்டிடங்களில் இருந்து உரிமம் இன்றி மலக்கசடு அல்லது கழிவுநீரை கொண்டு செல்லுதல், சேகரித்தல், அகற்றுதல் கூடாது.
சேகரிக்கும் கழிவுநீரை உள்ளாட்சிஅமைப்புகள் அனுமதிக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே திறந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் தனியார் கழிவுநீர் லாரிகளுக்கு உரிமம் வழங்கப்பட உள்ளது.
விதிகளை மீறி கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டாலோ, அனுமதிக்கப்பட்ட இடம் தவிர நீர்நிலைகள் போன்றவற்றில் திறந்துவிட்டாலோ முதல் குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம் வரையும், 2-வது மற்றும் தொடர் குற்றத்துக்கு ரூ.50 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்க வேண்டும். விதிகளை மீறினால் உரிமத்தை இடைநீக்கம் செய்யவும் சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குற்றம் உறுதி செய்யப்பட்டால், அதற்கு பயன்படுத்திய வாகனம், மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.
கழிவுநீர் லாரிகளில் ஜிபிஎஸ், வேக கட்டுப்பாடு கருவிகள் பொருத்துவது போன்றவற்றை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த சட்டத் திருத்தம் மூலம் சென்னை, புறநகர் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் நீர்நிலைகளில் கழிவுநீர் திறந்து விடுவது தடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.