Published : 13 Aug 2022 07:39 AM
Last Updated : 13 Aug 2022 07:39 AM
சென்னை: சென்னை மணலி சிபிசிஎல் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள வாயு கசிவை தடுக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கனிமொழி எம்.பி.கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரிக்கு, திமுக எம்.பி.கனிமொழி அனுப்பியுள்ள கடிதம்:
சென்னை மணலி சிபிசிஎல்தொழிற்சாலையில் கடந்தஒரு மாதத்துக்கும் மேலாக நச்சு வாயு கசிந்து வருகிறது. மணலி மற்றும் அதைஒட்டிய திருவொற்றியூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள், துர்நாற்றம் வீசும் வாயுக் கசிவால் வீடுகளில் வசிக்க முடியவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதி மக்களின் சுகாதாரம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வாயு கசிவுக்கான காரணம், கசியும் வாயுவின் தன்மை, அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய, தமிழக அரசு 5 பேர் கொண்ட வல்லுநர் குழுவை கடந்த ஜூலை 21-ம் தேதி அமைத்தது. அக்குழு உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
இந்த ஆய்வில், சிபிசிஎல்தொழிற்சாலையில் இருந்துவாயு கசிந்தது உறுதி செய்யப்பட்டது. வெளியேறிய வாயு, ஹைட்ரஜன் சல்பேட்ஆக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது, நரம்புமண்டலத்தை பாதிக்கக்கூடியது. குழந்தைகளின் மூளையைப் பாதித்து, மனித நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனவே, வாயு கசிவை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை சிபிசிஎல் நிறுவனத்துக்கு வல்லுநர் குழு வழங்கியுள்ளது.
திருவொற்றியூர், மணலிபகுதிகளில் தற்போதும் வாயு கசிவு உணரப்படுகிறது.
கடந்த 7-ம் தேதி காலைநச்சு வாயு கசிவு அதிகரித்ததால், திருவொற்றியூர் டிகேஎஸ் நகர், காமதேவன் நகர் பகுதி மக்கள் அச்சத்துக்கு ஆளாகினர். எனவே, மக்களின் சுகாதாரம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிபிசிஎல் தொழிற்சாலையில் ஏற்படும் வாயுக் கசிவை தடுக்க வேண்டும். அதுவரை ஆலையில் உற்பத்தி பணியைநிறுத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT