

சேலம்: சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அப்புசாமி தெருவில் போர்வெல் அடிபம்பை நிலத்தில் பாதி மூடிய நிலையில் தார் சாலை போட்ட வினோத நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரவோடு இரவாக போர்வெல் அடிபம்பு அகற்றப்பட்டது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளிலும் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாநகராட்சி 28-வது வார்டில் உள்ள அப்புசாமி தெருவில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணி நடந்தது.
அப்போது, சாலை ஓரத்தில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்த நிலையில் இருந்த போர்வெல் அடிபம்பை அகற்றாமல், அப்படியே நிலத்தில் பாதி மூடிய நிலையில், தார் சாலை போடப்பட்டது.
ஒப்பந்ததாரரின் இந்த நடவடிக்கையால், செவ்வாய்பேட்டை பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பணியாளர்களை இரவோடு இரவாக அனுப்பி, போர்வெல் அடி பம்பை அகற்றி அதன் மீது மண்ணை கொட்டி மூடியுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது; புதியதாக சாலைப் பணி, பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிப்பு பணிநடக்கும் வேளைகளில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி பொறியாளர்கள், மேற்பார்வையிட வேண்டும்.
ஆனால், மாநகராட்சி பகுதியில் நடக்கும் எந்தவொரு பணி இடத்துக்கும் அதிகாரிகள் வராமலும், பணி குறித்து ஆய்வு செய்யாமலும், அலட்சியம் காட்டுகின்றனர்.
மேலும், பணி முடிவடைந்த பின்னர் பெயரளவில் ஆய்வு செய்கின்றனர். எனவே, மாநகராட்சி ஆணையர் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் சீராக பணியாற்றுகின்றனரா என்று ஆய்வு செய்ய வேண்டும், என்றனர்.