“திராவிட மாடலில் இருந்து தேசிய மாடலுக்கு திமுக வந்திருக்கிறது” - தமிழக பாஜக

மதுரையில் விடுதலை வீரர்கள் வீர யாத்திரையை பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தொடங்கி வைத்தார்.
மதுரையில் விடுதலை வீரர்கள் வீர யாத்திரையை பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

மதுரை: “இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடிய அனைத்து தலைவர்களையும் கவுரவிக்க முந்தைய அரசுகள் மறந்துவிட்டன. ஒரு சிலரால் மட்டும் சுதந்திரம் அடைந்ததாக பேசுகின்றனர்” என பாஜக அமைப்பு பொதுச் செயலர் கேசவவிநாயகம் கூறினார்.

தமிழக பாஜக ராணுவப் பிரிவு, பிரசாரப் பிரிவு, கல்வியாளர் பிரிவு, விளையாட்டு பிரிவுகள் சார்பில் மதுரை மாவட்டத்தில் விடுதலை வீரர்கள் வீர வணக்க ரத யாத்திரை நடத்தப்படுகிறது. யாத்திரையை மதுரை பாண்டிகோவில் மஸ்தான்பட்டி ரிங்ரோட்டில் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலர் கேசவவிநாயகம் இன்று தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில், ''இந்தியாவின் சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்தி போராடிய தலைவர்கள் பல லட்சம் பேர் உள்ளனர். ஆனால், ஒரு சிலரால் மட்டும் சுதந்திரம் கிடைத்ததாக இதுவரை பேசி வந்துள்ளனர். அந்த ஒரு சில தியாகிகளுக்கு மட்டுமே இதுவரை முக்கியத்துவம் அளித்து வந்துள்ளனர். ஆனால், இது உண்மையல்ல. நாட்டின் சுதந்திரத்திற்காக கால் நூற்றாண்டு காலம் போராடியவர்கள் அதிகளவில் உள்ளனர். இதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது.

சுதந்திரத்துக்காக போராடிய அனைவரையும் கவுரவப்படுத்த இதுவரை இருந்து வந்த அரசுகள் மறந்துவிட்டன. அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்காகவே 75வது சுதந்திர தினத்தை ஒட்டி விடுதலை வீரர்கள் வீர வணக்க யாத்திரை நடத்தப்படுகிறது'' என்றார்.

மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் பேசுகையில், ''திமுக அமைச்சர்கள் தேசியக் கொடியை வழங்கியுள்ளனர். இது பெரிதும் பாராட்டப்பட வேண்டியது. திமுக திராவிட மாடலில் இருந்து தேசிய மாடலுக்கு வந்திருப்பது வரவேற்கதக்கது'' என்றார்.

இதில் பாஜக முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநில தலைவர் என்.கே.ராமன், துணைத் தலைவர் மாணிக்கம் நடராஜன், மாவட்ட புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மாவட்ட செயலர் சந்தோஷ் சுப்பிரமணியன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் செல்வமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்த வாகனம் மதுரை மாவட்டம் முழுவதும் சென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in