

புதுச்சேரி: “புதுச்சேரி வழியாக தமிழகத்தில் நுழைய திட்டமிடும் பாஜகவின் முயற்சி நடக்காது” என்று அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா முன்னிலையில் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலர் தாமோதரன் பெருமாள் உள்ளிட்ட பலர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இணைந்தனர்.
அந்நிகழ்வில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "பாஜக புதுச்சேரி வழியாக தமிழகத்திற்குள் நுழைய முயற்சிக்கிறது. ஆனால், அது நடைபெறாது, ஏனென்றால் பாஜக சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும்தான் இருக்கும், இருக்கிறது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வாக்குறுதி அளித்த எதையும் இதுவரைச் செய்யவில்லை. மத்திய அரசு, புதுச்சேரிக்கு ஒன்றுமே செய்யவில்லை.
வரும் பட்ஜெட்டில் பெரிய அளவில் அடி கிடைக்கும். புதுச்சேரிக்கு சங்கடமான சூழல் ஏற்படும். புதுச்சேரிக்கு மத்திய பாஜக அரசு எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக இரும்புக்கரம் கொண்டு புதுச்சேரியை நசுக்கி வருகிறது. எனவே, பாஜகவின் செயல்கள் குறித்து மக்களிடம் திமுகவினர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்" என்று சிவா கூறினார்.