

புதுச்சேரி: "என்னை ராஜினாமா செய்யச் சொல்வதைப் பற்றி கவலைப்படவில்லை; ஆளுநர்களை நோக்கிதான் அதிக அம்புகள் வீசப்படுகின்றன” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆவேசமாக தெரிவித்தார்.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் சரியான உணவு மேளாவை இன்று பிற்பகல் தொடங்கி வைத்தார். அவரிடம் ‘பட்ஜெட் ஒப்புதல் தாமதமானதால் எதிர்க்கட்சிகள் உங்களை ராஜினாமா செய்ய கூறியுள்ளார்களே’ என்று கேட்டதற்கு, "புதுச்சேரியில் எல்லாமே சரியாக நடக்கிறது. பிரச்சினை ஏதுமில்லை. என்னை ராஜினாமா செய்ய சொல்வதைப் பற்றி கவலைப்படவில்லை. கரோனா காலத்தில் கஷ்டப்பட்டு இரவு பகலாக பணியாற்றினேன். புதுச்சேரி மாநிலத்துக்கு ஆளுநராக என் பணியை ஆற்றி வருகிறேன். சில நேரங்களில் நிர்வாக ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் வரலாம்.
அதுவும் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் நேரத்தில் ஜிஎஸ்டி உட்பட பலவற்றில் சில கொள்கை முடிவுகளை மத்திய அரசு எடுக்கிறது. எல்லாவற்றையும் அரசியல் ஆக்குவதை கவலைப்படவில்லை. பட்ஜெட்டில் என்னைப் பொறுத்தவரை இந்த அரசானது மக்களுக்கு நல்லது செய்வதற்கு உறுதுணையாக இருக்கிறேன். முன்பு இருந்ததுபோல் கால தாமதம் ஆவதில்லை.
நிதிநிலை சரியில்லாவிட்டாலும் நிதித் துறை அதிகாரிகளை அழைத்து சரிசெய்யும் விதத்தில் செயல்படுகிறேன். மனசாட்சிபடி இவர்கள் சொல்வதுபோல் இல்லை. வேகமாகதான் பணியாற்றுகிறேன். பிரதமர் கூறியதுபோல் பெஸ்ட் புதுச்சேரியாகும். நம் மாநிலம் பலனடைந்து வருகிறது. நிறைய திட்டங்கள் வரப்போகிறது. கடந்த ஐந்து ஆண்டுகள் ஏதும் செய்யாமல் இருந்துவிட்டு அது இல்லை, இது இல்லை என்று கேட்கிறார்கள்.
வரைமுறை இருக்கிறது. ஆளுநர் ஏதாவது செய்தால் சூப்பர் முதல்வரா என்கிறார்கள். "இது எனது வேலையா" என்று கேட்டால் ஆளுநர் ஏன் செய்யவில்லை என்கிறார்கள். நிர்வாக ரீதியாக யார் செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்று கையாளுகிறோம்.
ஜிஎஸ்டியில் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டியுள்ளது. அதிக நிதியை புதுச்சேரி பெறப் போகிறது.
எவ்வளவு காலஅவகாசம் என்பதைச் சொல்வோம். எனது முயற்சியாலும், முதல்வர், அமைச்சர்கள் முயற்சியாலும் புதுச்சேரி பிரமாண்ட வளர்ச்சி பெறபோகிறது. அதைப் பார்த்து அவர்கள் பாராட்டட்டும். எதையும் விமர்சனமாக எடுக்கவில்லை. விமரிசையாக செய்வேன். அவர்கள் கூறுவது சிரிப்பாக இருக்கிறது. ஆளுநர்களை நோக்கிதான் அதிக அம்புகள் வீசப்படுகின்றன. பழுத்த மரம்தான் கல்லடிப்படும்'' என்று குறிப்பிட்டார்.