குளச்சல் துறைமுகத் திட்டத்தைத் தடுக்க இலங்கை அரசு சதி: பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு

குளச்சல் துறைமுகத் திட்டத்தைத் தடுக்க இலங்கை அரசு சதி: பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

குளச்சல் துறைமுகத் திட்டத்தைத் தடுப்பதற்கு இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய்கிறது. அதன் சூழ்ச்சி வலையில் சிக்கக்கூடாது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த மூன்று நாட்களாக டெல்லியில் தங்கி பிரதமர் மோடி மற்றும் மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்துப் பேசினார்.

கொழும்புத் துறைமுகத்தில் தற்போது நான்கு சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன. இவற்றில் இருமுனையங்களை சீனா கட்டித் தந்துள்ளது. ஐந்தாவது முனையம் ஒன்றினை கட்டவிருப்பதாகவும், அதைக் கட்டுவதற்கான உடன்பாட்டினை இந்திய அரசு நிறுவனமான இந்திய சரக்குப் பெட்டகக் கழகத்திற்கு அளிக்க இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

குளச்சல் - இனையம் சரக்குப் பெட்டக துறைமுகம் அமைக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டிருப்பதைத் தடுக்கவே இம்முயற்சியை ரணில் விக்ரமசிங்கே மேற்கொண்டுள்ளார். ஏற்கெனவே குளச்சல் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்றினால் இலங்கையின் ஒரே துறைமுகமான கொழும்பு பெரும் பாதிப்பிற்குள்ளாகும் என அப்போதைய பிரதமர் நேருவிடம் இலங்கைப் பிரதமர் பண்டார நாயகா வேண்டிக்கொண்டதன் காரணமாக குளச்சல் துறைமுகத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இப்போது மீண்டும் அதே முயற்சியை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.

மேற்கு நாடுகளில் இருந்து கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் முக்கிய கடல் பாதை கொழும்புத் துறைமுகத்தைத் தொட்டுச்செல்வதால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சரக்குப் பெட்டகங்களும், இந்தியாவிற்கு வரும் சரக்குப் பெட்டகங்களும்கொழும்புத் துறைமுகத்தின் வழியாகவே ஏற்றி இறக்கப்படுகின்றன. இதன்மூலம் இலங்கை அரசுக்கு பெரும் வருமானம்கிடைக்கிறது.

குளச்சல் துறைமுகம் அமைக்கப்பட்டால் கொழும்புத் துறைமுகம் தனது முக்கியத்துவத்தை இழக்கும்.பொருளாதார ரீதியாக இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவேதான் இத்திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்கு இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய்கிறது. அதன் சூழ்ச்சி வலையில் சிக்காமல் இந்திய அரசு குளச்சல் துறைமுகத்திட்டத்தை நிறைவேற்றும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in