Published : 12 Aug 2022 02:14 PM
Last Updated : 12 Aug 2022 02:14 PM

'நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவைப் பெற்று 10 லட்சம் பேர் பசி போக்கப்பட்டது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஓராண்டில் நிகழ்ச்சிகளில் மீதம் இருக்கும் உணவைப் பெற்று 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று முதல் 3 நாட்கள் உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. 'சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022' என்ற பெயரில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் பல்வேறு திரைக் கலைஞர்கள், முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். பாரம்பரிய உணவு வகைகளை பிரபலப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த உணவுத் திருவிழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பேசுகையில்," கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப உணவு பாதுகாப்புத் துறையில் மூன்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் ஒன்று சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பொருட்களின் விற்கும் நடைமுறைக்கு எதிரான விழிப்புணர்வு, உணவுப் பொருட்களின் லேபல்களில் பார்த்து தெரிந்து அறிந்து கொண்ட பிறகு பொருட்களை வாங்க வேண்டும் ஆகிய அறிவிப்புகள் வெளியானது.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உப்பின் அளவையும் சர்க்கரையின் அளவையும் சற்றே குறைப்போம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் அதை அரசாங்கமே ஒரு லிட்டருக்கு ரூ. 30 என்று வாங்கிக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் 23.33 லட்சம் லிட்டர் எண்ணெய் பெரிய நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் நிகழ்ச்சிகளில் மீதம் உள்ள உணவை அரசு பெற்றுக் கொண்டு பசியால் வாடும் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது" இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x