

சென்னை: சுதந்திர தின நல் ஆளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்கள், அரசுத் துறைகள், அரசு ஊழியா்கள், அரசு சார்பு அமைப்புகள், நிறுவனங்களுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படும்.
இந்நிலையில் இந்தாண்டு சுதந்திர தின நல் ஆளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவா்களை மீட்டு தொழில் முனைவோராக மாற்றியதற்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருக்கும், திருநங்கைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்த செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலருக்கும், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை சிறப்பாக உருவாக்கிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
மேலும் நீர் நிலைகளை மீட்டு எடுத்த அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சியா்களுக்கும், பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்து சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கும், வேளாண் இயந்திரங்களை கைப்பேசி செயலி வழியாக வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தி தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் முதன்மைப் பொறியாளருக்கும், சென்னையில் ஆதரவற்ற, மனநிலை பாதித்தோரை மீட்டு பராமரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளருக்கும் நல் ஆளுமை விருது வழங்கப்படவுள்ளது.