

நியாய விலைக் கடைகளில் பருப்புகள் மற்றும் பாமாயில் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், தீபாவளி பண்டிகைக்கு பலகாரம் செய்ய முடியாமல் போய்விடுமோ என மக்கள் கவலையடைந்துள்ளனர்.
தமிழக அரசு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விலையில்லா அரிசி மற்றும் மலிவு விலையில் கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 32 ஆயிரத்து 219 நியாய விலைக் கடைகள் உள்ளன. இதில், 21 ஆயி ரத்து 779 விற்பனையாளர்களும், 3 ஆயிரத்து 856 கட்டுநர்களும் பணிபுரிகின்றனர்.
தமிழகம் முழுவதும் 1 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்தக் குடும்ப அட்டைகளுக்கு சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை தலா ரூ.30-க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
வெளிச்சந்தையை விட மிகக் குறைந்த விலையில் பருப்பு மற்றும் எண்ணெய் விற்பனை செய்வதால் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் இவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த பருப்பு மற்றும் எண்ணெய் திடீரென இந்த மாதம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, குடும்பத் தலைவி வாசுகி என்பவர் கூறும்போது, வெளிச்சந்தையில் துவரம் பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூ.120 முதல் 130 வரையிலும், உளுத்தம் பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூ.120 முதல் 150 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் ரேஷன் கடையில் இவை இரண்டும் தலா ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் நடுத்தரக் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். மாதந்தோறும் அனைத்துப் பொருட் களும் முதல் வாரத்திலேயே அனைத்துக் கடைகளிலும் கிடைத்துவிடும். ஆனால், இந்த மாதம் தொடங்கி 9 நாட்கள் ஆகியும் இதுவரை ரேஷன் கடைகளில் பருப்பு வகைகளும், பாமாயில் எண்ணெய்யும் விநியோகம் செய்யப்படவில்லை. தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இப்பொருட்கள் கிடைக்காவிட்டால் பலகாரம் செய்ய முடியாத நிலை ஏற்படும்’’ என்றார்.
இதுகுறித்து, தமிழ்நாடு முற் போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் டி.சடகோபன் கூறும் போது, நியாயவிலைக் கடைகளில் திடீரென இந்த மாதம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்பட வில்லை. எனவே அவற்றை வெளிச்சந்தையில் கள்ளத்தனமாக விற்க வாய்ப்புள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், இம்மாதத்தில் பண்டிகைகள் அதிகம் வருவதால் இவற்றின் தேவை அதிகமாக உள்ளது. எனவே அரசு எவ்வித தட்டுப்பாடும் இன்றி இப்பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து, அரசு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்புகள் மற்றும் பாமாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை மாதந்தோறும் டெண்டர் அடிப்படையில் வெளிச்சந்தையில் இருந்து வாங்கி மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதம் டெண்டர் விடுவதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டதால் இப்பொருட்களை நியாயவிலைக் கடைகளுக்கு வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் இப்பொருட்கள் வழங்கப்படும்” என்றார்.