Published : 12 Aug 2022 05:15 AM
Last Updated : 12 Aug 2022 05:15 AM

பெரியபாளையம் கோயில் | காணிக்கையாக வந்த 91 கிலோ தங்க கட்டிகள் வங்கியில் முதலீடு - பத்திரத்தை நிர்வாகிகளிடம் வழங்கினார் முதல்வர்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம், பவானியம்மன் கோயிலில் காணிக்கையாக வந்த தங்க நகைகளை உருக்கி, தூய தங்கக் கட்டிகளாக வங்கியில் முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தை கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். உடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ உள்ளிட்டோர்.

சென்னை: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட 91 கிலோ தங்கத்தை உருக்கி, தங்கக் கட்டிகளாக வங்கியில் முதலீடு செய்யப்பட்டது. இதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தை கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வந்த பலமாற்று தங்க நகைகள் உள்ளிட்டவற்றில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றப்படும். கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் அந்த தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலம் கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை கண்காணிக்க 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட் டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை மண்டலத்துக்கு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு முன்னிலையில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. அரக்கு, அழுக்கு, போலி கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டு, 130 கிலோ 512 கிராம் எடையுள்ள தங்க இனங்கள் பிரிக்கப்பட்டன. இவை கோயில் பரம்பரை அறங்காவலர் தீர்மானம் அடிப்படையில், மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி தூய தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கியின் தங்கவைப்பு திட்டத்தின்கீழ் தங்கப் பத்திரமாக முதலீடு செய்யும் வகையில், 91 கிலோ 81 கிராம் எடையுள்ள தூய தங்கக் கட்டிகள் கோயில் நிர்வாகம் மூலம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பெயரில் முதலீடு செய்யப்பட்டது. இந்த முதலீட்டுப் பத்திரத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

முதலீடு செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.46.31 கோடியாகும். இதற்கான வட்டி வீதம் 2.25 சதவீதமாகும். இதன்மூலம் ஆண்டுக்கு கோயிலுக்கு வட்டித் தொகையாக ரூ.1.04 கோடி கிடைக்கும். இது கோயில் சார்ந்த திருப்பணிக்கு பயன்படுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ, அறநிலையத் துறை செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x