Published : 12 Aug 2022 03:49 AM
Last Updated : 12 Aug 2022 03:49 AM

தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச பட்டம் விடும் விழா - மாமல்லபுரத்தில் நாளை தொடக்கம்

கோப்புப்படம்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடர்ந்து, சர்வதேச பட்டம் விடும் திருவிழா, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது.

சர்வதேச பட்டம் விடும் திருவிழா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை நடைபெற்று வந்தது. தற்போது முதல்முறையாக தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் முதல்முறையாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 13-ம் தேதி சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்க உள்ளது. சுற்றுலாத் துறை மூலம் நடத்தப்படும் இந்த விழாவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

இந்த பட்டம் விடும் திருவிழா ஆகஸ்ட் 15-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் வெளிநாடுகளில் இருந்து 4 குழுக்கள், இந்தியாவில் இருந்து 6 குழுக்கள் என மொத்தம் 10 குழுக்கள் கலந்துகொள்கின்றன. விழா மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த விழாவில், பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக மாலை 6 மணி முதல் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பட்டம் விடும் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சுற்றுலாத் துறை இயக்குநர் சந்திப் நந்தூரி நேற்று பார்வையிட்டார். பட்டம் பறக்கவிடப்பட உள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

இந்த விழாவில், சிறுவர்களை இலவசமாக அனுமதிக்கவும் பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கவும் சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x