Published : 12 Aug 2022 07:29 AM
Last Updated : 12 Aug 2022 07:29 AM
விருதுநகர்: தமிழகத்தில் உள்ள 91 அரசுதொழிற்பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) முதல்கட்டமாக 71-ல் டாடா நிறுவனத்துடன் இணைந்து `தொழில்நுட்ப மையம் 4.0' தொடங்கப்பட உள்ளது.
இதற்காக ரூ.2,877.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 87.5 சதவீதம் டாடா நிறுவனம், 12.5 சதவீதம் தமிழக அரசின் பங்களிப்பாகும். மேலும், 71 அரசு ஐடிஐ-களிலும் தலா ரூ.3.73 கோடியில் 10,500 சதுரஅடி பரப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதுகுறித்து அரசு ஐடிஐ அலுவலர்கள் கூறியதாவது: தேர்ந்தெடுக்கப்பட்ட 71 அரசு ஐடிஐ-களுக்கும் இயந்திரங்கள், பயிற்சிக் கருவிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காக தலா ரூ.31 கோடி வீதம், மொத்தம்ரூ.2,201 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றுக்காக ரூ.2,862.01 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்காக 218 புதியபணியிடங்களும், 39 ஒப்பந்தப்பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களது ஊதியம் உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.15.42 கோடி என மொத்தம் ரூ.2,877.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்புதிய மையத்தில் தொழில்நுட்பக் கருவிகள் பயன்பாடு, ரோபோ தொழில்நுட்பம், பெயின்டிங் தொழில்நுட்பம், தானியங்கி தொழிற்சாலைகளில் கணினி வழி பயன்பாடு, மின் வாகனம், இணையதள கருவிகள், நவீன உற்பத்தி முறைகள், கணினி வழி வடிவமைப்பு, நவீன குழாய் அமைப்பு போன்ற பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த பயிற்சியில் ஐடிஐ படித்தவர்கள் மட்டுமின்றி, கலை, அறிவியில் கல்லூரிகள் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும், பட்டயப் படிப்புப் படித்தவர்களும் சேரலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை அரசு ஐடிஐ-களில் இப்பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது. ஓரிரு நாட்களில் புதிய கட்டிடங்களுக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT