

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலைப் பற்றி விசாரித்துச் சென்றார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதல்வரின் உடல்நிலைப் பற்றி விசாரிப்பதற்காக காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு அப்போலோ மருத்துவமனைக்கு இன்று வந்தார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த குஷ்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முதல்வரின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக வந்தேன். டாக்டர்களையும், அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினேன். முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.
அரசியலில் வேறுபாடு இருந்தாலும், முதல்வர் துணிச்சல் மிக்கவர். தைரியமான பெண்மணி. முதல்வர் விரைவில் வீடு திரும்ப வேண்டும். தமிழக மக்களோடு தீபாவளியைக் கொண்டாட வேண்டும்'' என்றார்.