தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய பாடத்திட்டம் வடிவமைப்பு: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக கணிதவியல் துறை சார்பிலான தொழில்நுட்பக் கண்காட்சியை பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். படம்: பு.க.பிரவீன்
அண்ணா பல்கலைக்கழக கணிதவியல் துறை சார்பிலான தொழில்நுட்பக் கண்காட்சியை பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னை: தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.

நம்நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அண்ணா பல்கலை. கணிதவியல் துறை சார்பிலான தொழில்நுட்பக் கண்காட்சி கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது.

துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்தார். இதில் ஏராளமான பொறியியல் மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். இக்கண்காட்சி இன்றுடன் (ஆகஸ்ட் 12) நிறைவு பெறவுள்ளது.

கண்காட்சியை தொடங்க விழாவுக்குப் பின் வேல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தொழில்நுட்ப கண்காட்சி பல்வேறு துறைகளின் கூட்டிணைப்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கேற்ப அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தை திறன் பெற்ற பேராசிரியர்கள், தொழிற்துறை நிபுணர்களைக் கொண்டு மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த புதிய பாடத்திட்டம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை. கல்விக்குழு கூட்டம் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற உள்ளது. இதில் புதிய பாடத்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு அதை அமல்படுத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்.

போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 18 தனியார் பொறியியல் கல்லூிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நிறுத்திவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இறுதி வாய்ப்பாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அந்த கல்லூரிகளுக்கு 2 வாரம் அவகாசம் தரப்பட்டுள்ளது. அதற்குள் கட்டமைப்பை மேம்படுத்தினால் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதவிர அண்ணா பல்கலை. வளாகத்தில் ஐவுளி தொழில்நுட்பத் துறை சார்பில் கதர் மற்றும் கைத்தறி கண்காட்சியும் நேற்று தொடங்கப்பட்டது. நாளை (ஆகஸ்ட் 13) வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in