

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 5,800 பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களில் தேசியக்கொடி ஏற்றப்படும் என தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆக.13 முதல் 15-ம் தேதி வரை 3 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும்என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை ஏற்று வீடுகளில் மட்டுமின்றி, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 5,800 பெட்ரோல்சில்லறை விற்பனை நிலையங்களிலும், தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சங்கம் திரையரங்கம் அருகில் உள்ள பாரத் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆக.14-ம் தேதி காலை 11.30 மணிக்கு தேசியக் கொடியேற்றுகிறார்.
தொடர்ந்து, கார்கில் போரில் வீரமரணம் அடைந்த 2 வீரர்களின் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குகிறார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.