

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாரை பாராட்டி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து வழங்கினார்.
மாமல்லபுரத்தில் நடந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில், பல நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர் பங்கேற்றனர்.
இதையடுத்து தமிழக காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 4,500-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், செஸ் போட்டி நிறைவடைந்ததை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தென்மாவட்ட போலீஸாருக்கு 3 நாட்கள் விடுப்பு வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பூஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பணியில் ஈடுபட்ட போலீஸாரை டிஜிபி சைலேந்திர பாபு நேற்று இரவு சந்தித்து பேசினார். காவல் கட்டுப்பாட்டு அறை அமைத்து, சிறப்பான முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதாக போலீஸாரை அப்போது அவர் பாராட்டினார். பின்னர், அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. இதை பார்வையிட்ட டிஜிபி, போலீஸாருடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், ஐஜி ராதிகா, டிஐஜி சத்யபிரியா, எஸ்பி சுகுணாசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.