முதல்வர் சிகிச்சை பெறும் அறைக்குச் சென்று விசாரித்ததாக காங். முன்னாள் எம்.பி. தகவல்

முதல்வர் சிகிச்சை பெறும் அறைக்குச் சென்று விசாரித்ததாக காங். முன்னாள் எம்.பி. தகவல்
Updated on
1 min read

அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அறைக்குச் சென்று மருத்துவர்களிடம் விசாரித்ததாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எம்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி (செப்.22) காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை சார்பில் அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்குச் சென்று முதல்வருக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர்களிடம் முதல்வரின் நலன் குறித்து விசாரித்து திரும்பினர்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., எம்.கிருஷ்ணசாமி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர் சிகிச்சை பெற்றுவரும் அறைக்குச் சென்று, முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் விசாரித்ததாக கூறியிருக்கிறார். அப்போது அவருடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறும்போது, "முதல்வர் ஜெயலலிதா இருக்கும் அறைக்குச் சென்றேன். அங்கு மருத்துவர்கள் இருந்தார்கள். முதல்வர் நலமாக இருக்கிறார். நன்றாக தேறி வருகிறார். அவருக்கு எந்தக் குறையும் இல்லை, வீண் வதந்திகள் பரவி வருகிறது. அதையெல்லாம் நம்ப வேண்டாம் என மருத்துவர்கள் என்னிடம் கூறினர். அப்போது மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையும் என்னுடன் இருந்தார். முதல்வர் நலமுடன் இருக்கிறார். எந்த பயமும் தேவையில்லை என்று அவரும் என்னிடம் கூறினார். முதல்வர் ஜெயலலிதாவால் பேச முடிந்தாலும் தங்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் பேசாமல் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்" என்றார்.

கடந்த 2007-ம் ஆண்டு தான் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா தற்போது சிகிச்சை பெற்றுவரும் அறையில் அனுமதிக்கப்பட்டிருந்ததையும் அப்போது ஜெயலலிதா தன்னை நேரில் சந்தித்து நலன் விசாரித்ததையும் நினைவுகூர்ந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in