Published : 11 Aug 2022 10:40 PM
Last Updated : 11 Aug 2022 10:40 PM

“பிரதமர் என்றும் பாராமல் தொந்தரவு” - மோடியின் 'கருப்பு' கருத்துக்கு தமிழக அரசியல்வாதிகளின் ரியாக்‌ஷன்

சென்னை: கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர்.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி ஒரு ட்வீட் பகிர்ந்திருந்தார். அதில் காங்கிரஸ் கட்சியைக் குறிப்பிடாமல், "சிலர் ஆகஸ்ட் 5ஆம் தேதி பில்லி, சூனிய மந்திரத்தைப் பயன்படுத்தினர். ஆனால் அது எடுபடவில்லை. தங்கள் விரக்தியைப் போக்கிக் கொள்ள அவர்கள் கருப்புச் சட்டை அணிந்தனர். ஆனால் பில்லி, சூனியம், மூடநம்பிக்கைகளால் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பில்லி, சூனியத்தால் மோசமான நாட்களுக்கு முடிவு கட்ட முடியாது' என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்வினைகள் கிளம்பியுள்ளது. ராகுல் காந்தி உள்ளிட்டோர் விமர்சனம் தெரிவித்துவரும் நிலையில் தமிழகத்தில் இருந்தும் பிரதமரின் கருத்துக்கு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரதமர் கருத்துக்கு பதிலளித்து தனது வலைதள பக்கத்தில், "கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் (சனாதனவாதிகளைத் தவிர) என்பதை நாடறியும்" என்று விமர்சித்துள்ளார்.

அதேபோல், "5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கருப்பு ஆடை அணிந்து போராடியவர்களை வசைமாரி பொழிந்திருக்கிறார் பிரதமர். ஒரு வாரம் ஆகிவிட்டது. போராடிய எல்லோரும் தொகுதிகளுக்கு வந்துவிட்டோம். ஆனாலும்… பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறது. அது தான் கருப்பு." என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

கரூர் எம்பி ஜோதிமணி, "அன்பிற்குரிய நரேந்திரமோடி அவர்களே உங்களைத் தொந்தரவு செய்வது கருப்பு நிறமா?அல்லது அதை அணிந்திருப்பவரா?!" என்று குறிப்பிட்டு ராகுல் காந்தி கருப்பு உடை அணிந்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x