Published : 11 Aug 2022 07:08 PM
Last Updated : 11 Aug 2022 07:08 PM

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் காவல் துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்த மனுவில், "கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக அளித்தப் புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கும் ஏற்பட்ட பிரச்சினையால், இரு தரப்பினருக்கும் சுவாதீன பிரச்சினை இருந்ததாக கூறி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கபட்டது. ஆனால் அவ்வாறு எந்த பிரச்சினையும் இல்லை. அந்த சீலை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், அதிமுக அலுவலகத்திற்குள் நாங்கள் சென்று பார்த்தோம்.

அப்போது அலுவலகத்தில் இருந்த சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை. ஜூலை 11-இல் புகுந்த ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராஜம் புகார் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட ராயப்பேட்டை காவல் நிலையத்தினர், ஒப்புகை சீட்டு கூட வழங்கவில்லை. உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பிறகே புகாரை பெற்றதற்கான சான்று கிடைக்கப் பெற்றது.

ஜூலை 23 ஆம் தேதி புகார் அளித்தும், புகாரை காவல் துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக காவல் துறை செயல்பட்டு வருவதால், புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ரியாஸ் , "அதிமுக அலுவலகத்தில் உள்ள் பொருட்கள் மாயமானது குறித்த புகாரில் சென்னை காவல் துறை முறையாக விசாரிக்கவில்லை என்பதால், வழக்கை வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டும்" என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சி வி.சண்முகம் கொடுத்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x