

காரைக்குடி: ‘‘சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி நிறுவனங்களை சர்வதேச அளவில் முக்கியமான, மாதிரி நிறுவனமாகக் கொண்டு வருவதே எனது இலக்கு’’என்று சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் கலைச்செல்வி தெரிவித்தார்.
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வக (சிக்ரி) இயக்குநராக இருந்த கலைச்செல்வி, சமீபத்தில் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக நியமிக்கப் பட்டார்.
காரைக்குடியில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறிவியல், தொழில்நுட்பத்தில் நான் ஆற்ற வேண்டிய கடமை அதிகமாக உள்ளது. நாட்டின் நம்பிக்கை, எதிர்பார்ப்பை நிறைவேற்ற தயாராகி வருகிறேன். காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் 27 ஆண்டுகள் விஞ்ஞானியாகப் பணிபுரிந்துள்ளேன்.
மின்வேதியியல் உலகுக்கு மிகப்பெரிய தீர்வை கொடுத்து வருகிறது. அறிவியல் தொழில்நுட்பம் என்று வந்துவிட்டால் இருபாலருக்கும் சம வாய்ப்புகள் உள்ளன. இதில் முயற்சிதான் முக்கியம். அதிலும், பெண்களுக்கு கடின உழைப்பு தேவை. வாழ்க்கையோடு இணைந்து செயல்படும் பெண்கள் வெற்றி பெற்றவர்களாக உள்ளனர். படித்த பெண்களின் திறமைகளை நாடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிஎஸ்ஐஆர் கட்டுப்பாட்டில் 37 ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. அவை கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் 5 தலைப்புகளின் கீழ் முடுக்கிவிடப்பட்டு செயல்பட்டன. இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தாய்மொழியை முழுமையாக உள்வாங்கிக் கொண்டால் அறிவியல், தொழில்நுட்பத்தை எளிதாக, சரியாகப் புரிந்துகொள்ள முடியும். தற்போது வாகனங்களில் லித்தியம் பேட்டரி தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அதற்கான முதலீட்டை அரசு அதிகரித்துள்ளது.
நமது நாட்டின் தட்பவெப்ப நிலை, சாலைகளுக்கு ஏற்ப லித்தியம் பேட்டரி தயாரிப்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2050-க்குள் சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி நிறுவனம் உலக அரங்கில் முக்கியமான நிறுவனமாகவும், மாதிரி நிறுவனமாகவும் மாறும்.
மேலும், சிறந்த பங்களிப்பின் மூலம் ஒட்டுமொத்த உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதே சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி நிறுவனத்தின் இலக்கு. இதனை நிச்சயம் நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.