Last Updated : 11 Aug, 2022 06:13 AM

 

Published : 11 Aug 2022 06:13 AM
Last Updated : 11 Aug 2022 06:13 AM

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கில் 3 பிரிவு ரத்து - கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

லதா ரஜினிகாந்த்

பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி, 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றார். இதற்காக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பம் இட்டிருந்தார்.

இந்நிலையில் முரளி கடனாக பெற்ற பணத்தை அபிர்சந்த் நஹாருக்கு கொடுக்கவில்லை. இதனால் அபிர்சந்த் நஹார் முரளி, லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீஸார் லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196 (போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது), 420 (மோசடி செய்து ஏமாற்ற முயற்சித்தது), 463 (ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் லதா ரஜினிகாந்த் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இதை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ‘‘குற்றப்பத்திரிகையில் லதா ரஜினிகாந்த் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டம் 196, 199, 420 ஆகிய பிரிவுகளுக்கு உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

எனவே அவர் மீதான வழக்கில் இருந்து 3 பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன‌. அதேநேரத்தில் அவர் மீதான இந்திய தண்டனை சட்டம் 463 (ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது) ஆகிய பிரிவு குறித்து கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம்''என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x