Published : 11 Aug 2022 07:38 AM
Last Updated : 11 Aug 2022 07:38 AM
சென்னை: போலி நிதி நிறுவனங்களில் யாரும்பணம் செலுத்தி யாரும் ஏமாற வேண்டாம் என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்.பி. ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பங்குச் சந்தை, ஆன்லைன் வர்த்தகம், ரியஸ் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் 10 முதல் 25 சதவீதம் வரை மாத வட்டியாக தருவதாகக் கூறி, சில மோசடி நிதிநிறுவனங்கள் மக்களை ஏமாற்றுகின்றன.
ஆடம்பர ஓட்டல்களில் கூட்டங்களை நடத்தி, மக்களைக் கவர்கின்றனர். இதை நம்பி முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு, ஓரிரு முறைவட்டி கொடுக்கின்றனர். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு எந்த தொகையும் கிடைக்காது.
இதுபோன்று மோசடியில் ஈடுபட்ட, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட ‘எல்பின் இ-காம்’ நிதி நிறுவனம், ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 93 ஆயிரம் பேர் ரூ.2,125 கோடி, திருச்சி ‘எல்பின் இ-காம்’ நிதி நிறுவனத்தில் 7 ஆயிரம் பேர் ரூ.500கோடி, ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் பேர் ரூ.6,000கோடியை முதலீடு செய்துள்ளனர்.
இப்படி பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தைக் கொண்டு, அந்த நிறுவனத்தினர் ஆடம்பர கார்கள், மாளிகை வீடுகள், கட்டிடங்கள், நிலங்கள் என சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர்.
இதுபோன்ற மோசடி நிதி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவது, இந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெயரிலோ அல்லது பினாமி பெயர்களிலோ வாங்கப்பட்டுள்ள சொத்துகளை மீட்டு, நீதிமன்றம் மூலம் ஏலம் விட்டு, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பச் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் ரூ.85 கோடிநிதி முடக்கப்பட்டுள்ளது. மேலும்,ரூ.155 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், திருச்சியைச் சேர்ந்த நிதி நிறுவனத்தின் ரூ.100 கோடிமதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தின் சொத்துகளைக்கண்டறியும் பணி தொடங்கியுள்ளது.
20 பேர் கைது
மோசடி தொடர்பாக ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் 2 பேரும், திருச்சி நிறுவனத்தில் 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த 3 நிறுவனங்களிலும் சுமார் 2 லட்சம் பேர், 8 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள்தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன்மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதையடுத்து, அவர்களைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
லுக்அவுட் நோட்டீஸ்
மேலும், ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேர், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க ‘லுக்அவுட்’ நோட்டீஸ் (தேடப்படும் குற்றவாளி) கொடுத்துள்ளோம். அதேபோல, ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யாமல், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பயனடையலாம். இவ்வாறு எஸ்.பி. ஜெயச்சந்திரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT