

சென்னை: இந்தியாவின் விடுதலைக்காக ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தசேவகர்கள் பலர் போராடி, உயிர்நீத்திருப்பதாக காங்கிரஸ் மூத்ததலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு,பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி வரும் 13,14, 15-ம் தேதிகளில் அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடியேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையொட்டி, நாடு முழுவதும் விழிப்புணர்வுப் பணிகளில் அந்தந்த மாநில பாஜக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்ததலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனதுட்விட்டர் பக்கத்தில் "80 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி`வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க காலகட்டத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கம் என்ன செய்து கொண்டிருந்தது என்று நினைக்கிறீர்கள்? அது மாபெரும் இயக்கத்தில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு, ஓர் ஓரத்தில் இருந்தது.
அந்த இயக்கத்தில் பங்கேற்ற காந்தி, நேரு, படேல், ஆசாத், பிரசாத், பன்ட் மற்றும் பலர் சிறையில் அடைக்கப்பட்டபோது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஷ்யாமாபிரசாத் முகர்ஜி பங்கேற்கவில்லை" எனப் பதிவிட்டிருந்தார்.
ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நேருதலைமையிலான அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருந்தார். ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட இவர், ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் பாரதிய ஜன சங்கத்தை 1951-ல் தொடங்கினார். பின்னாளில் அது பாஜகவாக மாறியது.
இந்நிலையில், ஜெய்ராம் ரமேஷின் பதிவுக்கு பதில் கொடுக்கும் வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஒருசிலரைக் கவுரவிப்பதற்காக இந்திய வரலாற்றைத் திரித்து, பலரை இழிவுபடுத்துவது காங்கிரஸின் நீண்டகால கொள்கையாக இருந்து வருகிறது.
ஆர்எஸ்எஸ் உருவாவதற்கு முன்பே, கே.பி.ஹெட்கேவார் மத்திய மாகாணத்தின் காங்கிரஸ் குழுவில் பணியாற்றினார். 1928-ல், மத்திய மாகாண பிராந்தியத்தில் சைமன் ஆணையத்துக்கு எதிரானப் போராட்டத்தை ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மற்றும் ஸ்வயம் சேவகர்கள் வழிநடத்தினர்.
1930 ஜூலை 12-ம் தேதி ஹெட்கேவார், 800 பேருடன் சத்தியாகிரக இயக்கத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு, 9 மாதங்கள் சிறையில் இருந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்கள் டெல்லி-முஜாபர் நகர் ரயில் பாதையை சேதப்படுத்தி, 2 மாதங்களாக செயல்படாமல் செய்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெயப்பிரகாஷ் நாராயண், சானேகுருஜி, அருணா ஆசப் அலிக்குஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்கள்பல நாட்கள் அடைக்கலம் கொடுத்தனர். இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.