

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘கியாந்த்’ புயல் கரையை கடக்காது என்றும், தீபாவளியை ஒட்டி தமிழகம், ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் 20-ம் தேதி வாக்கில், தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு, வழக்கம் போலவே பருவ மழை தொடங்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, தமிழக பகுதியில் இருந்த ஈரப்பதம் ஈர்க்கப்பட்டது. தமிழகத்தில் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு தொடங்கியது. இதனால், தமிழகத்தில் வடகிழக்கு பருவழை தொடங்குவது தள்ளிப்போனது.
மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டி ருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘கியாந்த்’ என பெயரிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடலை நோக்கி நகர்ந்து சென்ற இந்தப் புயல், தற்போது திசை மாறி, மத்திய மேற்கு வங்கக் கடலை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 570 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ‘கியாந்த்’ புயல், வரும் 29-ம் தேதி தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. இதுபோன்ற புயல் கரையைக் கடந்து, உயிரிழப்புகளையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத் தவல்லது. ஆனால் இந்தப் புயல் கரையைக் கடக்காது. அதே வேளையில், 27-ம் தேதி முதல் ஒடிஷா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து 27 முதல் 31-ம் தேதி வரை தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் வடக்கு தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறும்போது, ‘‘வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது தள்ளிப் போகிறது. வரும் 30-ம் தேதி லேசான மழையுடன் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.
வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால் இந்த ஆண்டு தீபாவளி மழைக்கு நடுவே கொண்டாடப்படும் தீபாவளியாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் எச்சரிக்கை கூண்டு
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக நாகப்பட்டினம், பாம்பன், சென்னை, எண்ணூர், தூத்துக் குடி, புதுச்சேரி துறைமுகத் திலும், காரைக்கால் தனியார் துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
“இப்புயலால் தமிழகத் துக்குப் பாதிப்பு ஏதும் இல்லை. மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
‘கியாந்த்’ புயல் பெயர் காரணம்:
உலக அளவில் உருவாகும் புயல் களுக்கு பெயர் வைக்கும் வழக்கத்தை முதன்முதலில் ஆஸ்திரேலியர்கள் தான் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து 1950 முதல் அமெரிக்கா பெயர் வைக்கும் பழக்கத்தை தொடங்கியது. கடந்த முறை வீசிய ரோணு புயலுக்கு மாலத்தீவு பெயர் சூட்டியது. அதனைத் தொடர்ந்து தற்போது உருவாகியுள்ள ‘கியாந்த்’ புயலுக்கு மியன்மர் நாடு பெயர் சூட்டியுள்ளது. ‘கியாந்த்’ என்ற பெயர் மியான்மர் நாட்டு மோன் மொழியில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலை என்று பொருள்.
அடுத்ததாக வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஓமன் நாடு பெயர் சூட்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.