

சுதந்திர தின விழா நெருங்கு வதைத் தொடர்ந்து, கோவையில் தேசியக் கொடிகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு விழா வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின பவள விழாவை சிறப்பிக்கும் வகையில், வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, நடப்பாண்டு தேசியக் கொடியின் தேவை அதிகரித்துள்ளது.
கோவையில் உள்ள அச்சகங்களில் தேசியக் கொடிகள் தயாரிப்புப் பணி தீவிரமடைந்து ள்ளது. இதுதொடர்பாக பெரியகடைவீதியில் தேசியக்கொடி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர் கூறும்போது, ‘‘கதர் துணி, மைக்ரோ துணி (கெட்டித்துணி), வெல்வெட் துணி ஆகியவற்றில் தேசியக் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன.
குறைந்தபட்சம் 8-க்கு 10 அங்குலம் முதல் அதிகபட்சம் 40-க்கு 72 அங்குலம் வரையும், 5-க்கு 12 அடி முதல் அதிகபட்சம் 15-க்கு 30 அடி வரையும், 6-க்கு 3 மீட்டர் அளவுகளிலும் தேசியக் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா அச்சம் காரணமாக, ஆர்டர்கள் குறைந்ததால் தேசியக்கொடிகள் தயாரிப்பும் குறைந்தது. நடப்பாண்டு ஆர்டர் அதிகரித்துள்ளது. இங்கு மட்டும் இதுவரை 4 லட்சம் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் கொடிகள் வெளியே அனுப்பப்பட்டு விட்டன.
நாமக்கல், சேலம், தருமபுரி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தேசியக்கொடிக்கான ஆர்டர்கள் அதிகம் வந்துள்ளன. தேசியக்கொடி குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.4 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது’’ என்றார்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பேன்சி கடைகள், ஸ்டேஷனரி கடைகளில் கம்பத்தில் ஏற்றும் வகையில் பெரிய தேசியக் கொடிகள், சட்டையில் பொருத்தும் வகையில் சிறிய தேசியக்கொடிகள், சிறிய குச்சியுடன் கூடிய தேசியக் கொடிகளின் விற்பனையும் தீவிரமடைந்துள்ளது.