Published : 11 Aug 2022 04:20 AM
Last Updated : 11 Aug 2022 04:20 AM
நாமக்கல்: திருச்செங்கோடு - சங்ககிரி செல்லும் சாலையில் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அருகேயுள்ள கீழேரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மேற்குறிப்பிட்ட இரு பள்ளிகளுக்கும் வந்து செல்கின்றனர்.
இதற்காக கீழேரிப்பட்டியில் இருந்து பள்ளி நேரத்தில் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று, சிறப்பு பேருந்து குறித்த நேரத்திற்கு வராததால் 8-ம் எண் அரசுப் பேருந்தில் மாணவ, மாணவியர் ஏற முற்பட்டனர்.
அவர்கள் பேருந்தில் ஏறுவதற்கு நடத்துநர் மறுப்பு தெரிவித்து திட்டியுள்ளார். மாணவர்களையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அதிருப்தியடைந்த மாணவ, மாணவியர் திருச்செங்கோடு - குமாரபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை திருச்செங்கோடு காவல் துறையினர் சமாதானப்படுத்தினர்.
அப்போது, ‘சிறப்பு பேருந்து சில நேரங்களில் தாமதமாக வருகிறது. அவ்வாறு வரும்போது இந்த பகுதி வழியாக செல்லும் எண் 8 மற்றும் இ- 5 என்ற எண் கொண்ட பேருந்துகளில் ஏறினால் நடத்துநர்கள் உங்களுக்கு சிறப்பு பேருந்தில் தான் இடம் எனக் கூறி இறக்கி விடுகின்றனர். பள்ளிக்கு நேரமாகிவிட்டது நாங்கள் செல்ல வேண்டும் என்று கூறினாலும் தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர்.
பள்ளிக்கு தாமதமாக சென்றால் ஆசிரியர்கள் திட்டுகின்றனர். சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும்’ என்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர். இதையேற்று மாணவ, மாணவியர் மறியலை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT