Published : 11 Aug 2022 06:28 AM
Last Updated : 11 Aug 2022 06:28 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால், விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, 16 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது. அப்பள்ளியில் படித்து வந்த 23 பேர் வேறு பள்ளியில் சேருவதற்காக நேற்று மாற்றுச் சான்றிதழை பெற்றனர்.
திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி, கடந்த மாதம் 25-ம்தேதி காலை விடுதி அறை மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த மாதம் 28-ம் தேதி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் பள்ளி விடுதியில் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். மாணவி மரணத்தையடுத்து கடந்த மாதம் 25-ம் தேதி முதல் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், பள்ளி மாணவிகளின் நலன் கருதி, பள்ளிக்கல்வித் துறை, கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நேற்று அப்பள்ளி மீண்டும் செயல்படத் தொடங்கியது. முதல் நாளான நேற்று பள்ளியின் மொத்த மாணவிகள் 859 பேரில், 617 மாணவிகள் (சுமார் 70 சதவீதம்) பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வராத மாணவிகளில் 63 பேர் விடுதி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதியின் மொத்த மாணவிகள் 63 பேரில், தெக்களூர் மற்றும் அதன் சுற்று வட்டார மாணவிகள் 23 பேர், நேற்று வேறு பள்ளிகளில் சேருவதற்காக மாற்றுச்சான்றிதழ் பெற்றுள்ளனர்.
மேலும், நேற்று மீண்டும் பள்ளி செயல்பட தொடங்கினாலும், மாணவிகளுக்கு பாடங்களுக்கு பதில், அவர்களிடம் உள்ள அச்சம், பதட்டம் ஆகியவற்றை போக்கும் வகையில் மனநல ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர். இன்றும் இந்த ஆலோசனை தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை முடிவுக்கு வராததால், மூடப்பட்டுள்ள பள்ளி விடுதியை மீண்டும் திறக்க சமூக நலத்துறை இன்னும் அனுமதி அளிக்கவில்லை. ஆகவே, விடுதி திறக்கப்படவில்லை.
சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை முடிவுக்கு வந்த பிறகு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் உள்ளிட்டவையின் அடிப்படையில் சமூக நலத்துறையின் அனுமதியுடன் விரைவில் விடுதி செயல்படும் என பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT