

திருத்தணி: திருவாலங்காடு அருகே தொழுதாவூரில் வெள்ளைகுட்டை நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மற்றொரு குட்டை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட உள்ளதாக பரவிய தகவலால் பொதுமக்கள் மறியல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே தொழுதாவூர் கிராமத்தில் வெள்ளைகுட்டை நீர்நிலை உள்ளது. இதை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த 5-ம் தேதி பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தயார் அருணோதயா வசித்த பழைய ஓட்டு வீடு, ஊராட்சி தலைவர் அருள்முருகனின் வீடு உட்பட 10 கட்டிடங்கள் அகற்றப்பட்டன. மேலும் ஒரு வீட்டையும் அருணோதயா குடும்பத்தினர் அகற்றத் தொடங்கினர்.
இந்நிலையில், வெள்ளை குட்டை அருகே உள்ள மற்றொரு குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளையும் வருவாய்த் துறையினர் அகற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து, அங்கு வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் சின்னம்மாபேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வந்த திருத்தணி வட்டாட்சியர் வெண்ணிலா, “சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியே வெள்ளை குட்டையை ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் அகற்றப்பட்டன. அருகே உள்ள குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாக வெளியானது தவறான தகவல்” என்றார்.
அதற்கு போராட்டக்காரர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பட்டா தொடர்பாக திருத்தணி கோட்டாட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது.