

பருவமழை பொய்த்ததால், முதுமலையைச் சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்கள் தண்ணீர் இன்றி தவிக்கின்றன. மேலும், அடர்ந்த வனப்பகுதிகளில் மணற்கேணிகளில் இருந்து தண்ணீர் சேகரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் 56 சதவீத வனப்பரப்பைக் கொண்டது. ஆண்டுதோறும் சுமார் 121 செ.மீ. மழைப் பதிவாகிறது. இங்கு மாயார், பவானி ஆகிய இரு ஆறுகள் உற்பத்தியாகி, சமவெளிப் பகுதிகளில் பாசனத்துக்கு பயன் படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு கோவை, ஈரோடு மாவட்டங்கள் வழி யாக காவிரியை சென்றடைகிறது.
வன வளம் மற்றும் தண்ணீர் தொட்டியாக விளங்கிய நீலகிரி மாவட்டத்தில், சமீப காலமாக தண் ணீர் பற்றாக்குறை தலைதூக்கி வருகிறது. வன அழிப்பால், அடிக்கடி பருவ மழை பொய்த்துவிடுகிறது.
நீலகிரி மாவட்டம் வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்டவை சீகூர், சிங்காரா வனச்சரகங்கள். முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள இந்த வனச்சரகங்களில் சொக்கநள்ளி, சிரியூர், ஆனைக்கட்டி ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கிராமங்கள் சுமார் 40 கி.மீ. தூரமுள்ள எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்டவை.
வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ள இந்த கிராமங்கள், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. தண்ணீர் தேவைக்கு மாயார் ஆற்றை நம்பியே உள்ளனர். இந்த ஆற்று நீரைக் கொண்டு விவசாயம் செய்கின்றனர்.
மழை மறைவான இப்பகுதியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் தண்ணீர் குறைந்துவிடும். கடந்த சில ஆண்டுகளாக, நீலகிரி மாவட்டத்தில் கோடை மற்றும் தென்மேற்கு பருவ மழை பொய்த்து வருவதால், மாயாற்றில் நீர் குறைந்து மக்கள் சிரமப்படுகின்றனர்.
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, அரசு சார்பில் இரு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. ஆனால், தற்போது இந்தக் கிணறுகள் பயனற்றுக் கிடக்கின்றன.
நடப்பு ஆண்டும் பருவ மழை பொய்த்துவிட்டதால், ஆனைக் கட்டி, சொக்கநள்ளி கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மேலோங்கி யுள்ளது. இங்குள்ள பழங்குடியினர், ஓராண்டாக விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதனால், விளைநிலங்கள் தரிசாக காணப்படுகின்றன. கால்நடைகளும் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன.
கிராம பெண்கள் தண்ணீர் தேடி, அடர்ந்த வனப்பகுதிக்குச் செல்கின்றனர். வனத்தில், பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீரை உடைகளை துவைக்கவும், பிற பயன்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.
மேலும், குடிநீருக்காக வனத்தில் உள்ள மணற்கேணிகளை தோண்டி தண்ணீரை சேகரிக்கின்றனர். கிடைக்கும் சொர்ப்ப அளவிலான தண்ணீரை வடிகட்டி, வீடுகளுக்கு கொண்டு சென்று பயன்படுத்துகின்றனர்.
இதுதொடர்பாக ஊர் மக்கள் கூறும்போது, “இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், வாகனங்களில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீர், சுகாதாரமற்றதாக உள்ளது. எனவே, சிங்காரா ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து விநியோகிக்க வேண்டும். தண்ணீர் தேவையைப் போக்க, நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றனர்.
ஆனைக்கட்டி ஊர் தலைவர் மணி கூறும்போது, “தண்ணீர் பற்றாக் குறையால், அரசு சார்பில் ஆழ் துளை கிணறுகள் அமைக்கப்பட் டன. ஆனால், மழை பற்றாக்குறை காரணமாக தண்ணீர் வருவதில்லை. இதனால், வாகனங்கள் மூலமாக தண்ணீர் கொண்டுவரப்பட்டு விநி யோகிக்கப்படுகிறது. தண்ணீருக் காக, மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்றார்.