Published : 10 Aug 2022 06:10 PM
Last Updated : 10 Aug 2022 06:10 PM

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசு அலட்சியம்: சீமான் சாடல்

சென்னை: "அத்திக்கடவு – அவினாசி திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரிய இழப்பீட்டுத் தொகையினை உடனடியாக வழங்கி, தமிழர்களின் 60 ஆண்டுகால வாழ்வாதாரக் கனவான அத்திக்கடவு – அவனாசி திட்டத்தை நடப்பாண்டிற்குள் நிறைவேற்றித்தர வேண்டுமென தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "மேற்கு மாவட்ட மக்களின் நெடுநாள் கனவான அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதில் திமுக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. பாசனத்திற்கு நீரின்றி மேற்கு மாவட்ட விவசாயிகள் தவித்துவரும் நிலையில், நடப்பாண்டில் பவானி ஆறு நிரம்பி வழிந்தும், திட்டம் தாமதமானதால் சேமிக்க வழியின்றி கடலில் சென்று கலந்து வீணாவது மிகுந்த வேதனையளிக்கிறது.

கடந்த 60 ஆண்டுகாலமாக அத்திக்கடவு – அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வேண்டுமென கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்கள் கோரி வருகின்றனர். அரை நூற்றாண்டிற்கும் மேலாக தமிழ்நாட்டினை மாறிமாறி ஆண்டு இரு திராவிட கட்சிகளின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும் நூற்றுக்கணக்கான பொய்வாக்குறுதிகளில் முதன்மையானதாக, ஆட்சிக்கு வந்தால் அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி தவறாமல் இடம்பெறுவது வாடிக்கையானது. ஆனால், மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்த ஒவ்வொரு முறையும் திட்டத்தை நிறைவேற்றாமல் இரு திராவிட கட்சிகளின் அரசுகளும் தொடர்ந்து மக்களை வஞ்சித்து வந்தன என்பதே யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

அரை நூற்றாண்டுகாலமாக கோரிக்கையை நிறைவேற்றாமல் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்த மேற்கு மாவட்ட மக்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு அத்திக்கடவு – அவினாசி திட்டப் போராட்டக் குழுவினை உருவாக்கி தொடர்ப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அவர்களுக்கு துணையாக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்ளும் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை விரைந்து நிறைவேற்றக்கோரி போராடத் தொடங்கிய பின்னர் வேறு வழியின்றி அன்றைய அதிமுக அரசு அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்குப் புத்துயிர் அளித்தது.

அதன்படி, ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் அணைப்பகுதியிலுள்ள பவானி ஆற்று நீரினைக்கொண்டு வறட்சி பாதித்த கோவை, திருப்பூர் , ஈரோடு மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகளில் நிரப்பும் திட்டமே புதிய அத்திக்கடவு – அவினாசி திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களிலுள்ள சிறிதும், பெரிதுமான ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால், ஏறத்தாழ 1.30 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்தேவை நிறைவேறுவதுடன், 50 லட்சம் மக்களின் குடிநீர் தேவையையும் தீர்ப்பதாக அமையும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் ரூ.1700 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கிய போதும், இரண்டாண்டு கால தாமதத்திற்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டுதான் அதிமுக அரசால் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதமே முடிந்திருக்க வேண்டிய இத்திட்டம் திமுக அரசின் தொடர் மெத்தனப்போக்கால் மேலும் தாமதமாகி வருகிறது. ஜூன் மாத்திற்குள் முடிக்கப்படும் என்று கடந்த மே மாதம் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு அளித்த உறுதிமொழியும் காற்றில் பறக்கவிடப்பட்டு தற்போது வரை 96 விழுக்காடு பணிகள் மட்டுமே நிறைவேறியுள்ளது. இதன்காரணமாக அண்மையில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் ஏற்பட்ட தேவைக்கதிகமான வெள்ள நீரினைச் சேமிக்க முடியாமல் காவிரி ஆற்றின் மூலமாக கடலில் கலந்து வீணாவது மீண்டும் தொடர்கதையாகவே உள்ளது.

வேளாண்மைக்கும், குடிநீருக்கும் நீரின்றி மூன்று மாவட்ட மக்கள் தவித்துவரும் நிலையில், நடப்பாண்டில் பெய்த நல்ல மழையால் கிடைத்த நீரையும், திமுக அரசின் அலட்சியப்போக்கால் சேமிக்க முடியாமல் போய்விட்டது என்பது மிகுந்த வேதனைக்குரியது. அத்திக்கடவு – அவினாசி திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் திமுக அரசு இழுத்தடிப்பு செய்வதே திட்டம் தொடர்ந்து தாமதமாவதற்கு முக்கிய காரணம் என்று வேளாண் பெருங்குடி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆகவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரிய இழப்பீட்டுத் தொகையினை உடனடியாக வழங்கி, தமிழர்களின் 60 ஆண்டுகால வாழ்வாதாரக் கனவான அத்திக்கடவு – அவனாசி திட்டத்தை நடப்பாண்டிற்குள் நிறைவேற்றித்தர வேண்டுமென தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு, அத்திக்கடவு – அவினாசி திட்டத்தில் விடுபட்டுப்போயுள்ள 800 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், கருமத்தம்பட்டி, தெக்கலூர், வஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளையும் இணைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் விதமாக முழுமையானத் திட்டமாக நிறைவேற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x