Published : 10 Aug 2022 12:55 PM
Last Updated : 10 Aug 2022 12:55 PM

இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக்கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, "சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது" என்று அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை உதவி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், "கோயில் சொத்தை குத்தகைக்கு எடுத்திருந்த தனி நபர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, "நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை உதவி ஆணையர் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து உதவி ஆணையர் வருத்தம் தெரிவிக்காத நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.இந்த அபராத தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், "பிரதான வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத நிலையில், தனக்கு எதிராக தனி நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது தவறு. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என தனக்கு எதிராக குற்றச்சாட்டு இல்லை எனவே அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, மேல் முறையீட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அதேசமயம், இணை ஆணையரும், உதவி ஆணையரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x