Published : 10 Aug 2022 04:15 AM
Last Updated : 10 Aug 2022 04:15 AM
சென்னை: தமிழகத்தில் அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். மேலும், உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோரை உருவாக்க `ஒலிம்பிக் தங்க வேட்டை' என்ற திட்டம் ரூ.25 கோடியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. பிரதமர் மோடி இப்போட்டியைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ஜூலை 29-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா உள்பட 186 நாடுகளைச் சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 12 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகள் நேற்று முடிவடைந்தன.
நேற்று மாலை நேரு உள்விளை யாட்டு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் ஆர்கடி வோர்கோவிச், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, டிரம்ஸ் சிவமணி, ராஜேஷ் வைத்யா உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட இசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்றார். அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் ஆர்கடி வோர்கோவிச், விஸ்வநாதன் ஆனந்த், சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் பேசினர்.
பின்னர், போட்டியில் வென்றவர் களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வழங்கினர். தொடர்ந்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த தமிழக வீரர்களின் கதையை வெளிப்படுத்தும் `தமிழ் மண்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
செஸ் ஒலிம்பியாட் போட்டியை அனைவரும் மெச்சத்தக்க வகையில், குறுகிய காலத்தில் தமிழக அரசு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழக அரசு ரூ.102 கோடி நிதி ஒதுக்கியதுடன், 18 துணைக் குழுக்களை உருவாக்கியது. நான்கே மாதங்களில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, உலகே வியக்கும் வகையில் போட்டியை நடத்தி முடித்துவிட்டோம்.
இதற்கு காரணமான அமைச்சர், செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களிடம் தரப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளீர்கள். இது மிகப் பெரிய பெருமையை ஏற்படுத்தித் தந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள், அதிகாரிகள் வந்து, உலகின் பழம்பெரும் மரபுச் சின்னமான மாமல்லபுரத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்கும் நல்வாய்ப்பைப் பெற்றீர்கள். இது உங்களின் நாடு. உங்களது கலாச்சாரத்தை தெரிந்துகொள்ள, எங்களுக்கும் வாய்ப்பாக இருந்தது.
நீங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தமிழக உணவுகளையும் தெரிந்து கொண்டுள்ளீர்கள். இது உங்கள் நினைவுகளில் எப்போதும் இருக்கும்.
உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோரை உருவாக்க `ஒலிம்பிக் தங்க வேட்டை' என்ற திட்டம் ரூ.25 கோடியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த வீரர்கள், வீராங்கனைகள் 1,073 பேருக்கு ரூ.26.85 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிக நிதி செஸ் வீரர்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது.
வீரர்களுக்கு அதிநவீனக் கருவிகள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளிக்கும் திட்டத்தில் 50 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகள் அவர்களை மெருகேற்ற ரூ.60 கோடி செலவு செய்யப்படும். கராத்தே, வாள் சண்டை உள்ளிட்டவற்றில் பதக்கம் பெறுபவர்களுக்கும் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும்.
தமிழகத்தில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்குப் பன்னாட்டு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வடசென்னையிலும், கோபாலபுரத்திலும் குத்துச்சண்டை அகாடமிகள் நிறுவப்பட உள்ளன. தமிழர்களின் வீர விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு, பிரம்மாண்ட விளையாட்டுக் களம் அமைக்கப்பட உள்ளது. அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
`சென்னை ஓபன்' எனப்படும் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி மற்றும் ஆசிய கடற்கரைப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த முயற்சி மேற் கொண்டுவருகிறோம். நம் மண்ணின் விளையாட்டுகளை சர்வதேச அளவில் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரம் பெற முயற்சி மேற்கொண்டுள்ளோம். சிலம்பாட்ட வீரர்களுக்கு கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் மாநில, மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதன்மூலம் புதிய திறமைசாலிகள் அடையாளம் காணப்படுவர்.
அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர உழைக்கிறோம். செஸ் ஒலிம்பியாட்டுக்குப் பின்னர் விளையாட்டுத் துறை அதிக பாய்ச்சலுடன் செல்லும். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள். எதிலும் வெற்றி தோல்வி முக்கியமல்ல, பங்கேற்புதான் முக்கியம். பங்கேற்கும் ஆர்வத்தை விட்டுவிடாதீர்கள். வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் சென்னைக்கு வரவேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
டிரம்ஸ் வாசித்த முதல்வர் ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், ராஜேஷ் வைத்யா (வீணை), ஸ்டீபன் (கீ போர்டு), நவீன் (புல்லாங்குழல்), சிவமணி (டிரம்ஸ்) ஆகியோர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, முதல்வரை நோக்கி டிரம்ஸ் இசைத்தவாறு சிவமணி வந்தபோது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் ஆர்கடி வோர்கோவிச் ஆகியோர் எழுந்து டிரம்ஸை இசைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT