

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2017 சரிபார்க்கும் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் எஸ்.ஸ்வர்ணா தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மொத்த வாக்காளர்கள் குறித்தும், மொத்த வாக்குச் சாவடிகள், புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப் பங்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை எஸ்.ஸ்வர்ணா கேட்டறிந்தார்.
‘மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அளவிலான அலுவலர் கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாறுதல் போன்ற காரணங்களால் காலியாக உள்ள வாக்குச்சாவடி அளவிலான அலுவலர் இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வாக்காளர் இறப்பு நேரிடும்போது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக அவர்களது பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
பிழைகளை நீக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்தவர்களை, வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கும்போது உரிய காலத்துக்குள் அதனை சரிபார்த்து பெயரை சேர்க்க வேண்டும்’ என்றார்.
இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் அருண் தம்புராஜ், தாம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், செங்கல்பட்டு கோட்டாட் சியர் பன்னீர்செல்வம், மதுராந்தகம் கோட்டாட்சியர் திவ்ய, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.