Published : 10 Aug 2022 07:21 AM
Last Updated : 10 Aug 2022 07:21 AM

நெய்வேலியில் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டதால் மோசமான விளைவுகள்: நாடாளுமன்றத்தில் அன்புமணி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

சென்னை: கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதனால், ஒட்டுமொத்த மாவட்டத்தையும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளை அறிவித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாமக உறுப்பினர் அன்புமணி, ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்காக மாவட்ட தாது அறக்கட்டளை மூலம், ஐந்தாண்டு முன்னோக்குத் திட்டம் தயாரிக்கச் செய்வதற்கான கொள்கை ஏதேனும் உள்ளதா?அத்தகைய திட்டத்தை தயாரிப்பதில் கிராம சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்துக் கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் ஏதேனும் வழங்கப்பட்டிருக்கின்றனவா?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் தாதுப் பொருட்கள் வெட்டி எடுக்கப்படுகின்றனவோ, அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட பகுதிகளின் மேம்பாட்டுக்காக ஐந்தாண்டு முன்னோக்குத் திட்டங்களை தயாரிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளையும் கடந்த ஜூன் 24-ம் தேதியிட்ட ஆணை மூலம் சுரங்கத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை மதிப்பிடுவதற்கான அறிக்கைகளை தயாரிப்பதில் மாவட்ட தாதுஅறக்கட்டளைக்கு கிராம சபைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் உதவி செய்யலாம். சுரங்கத்துறை அமைச்சகம் பிறப்பித்தஆணையின்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும்அங்கு வாழும் மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் திட்ட செயலாக்க அமைப்புகள் கலந்தாய்வு நடத்தி அடையாளம் கண்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், மருத்துவம், சுகாதாரம், கட்டமைப்பு வசதிகள் போன்ற பொதுமக்களுக்கு உடனடியாக தேவைப்படும் திட்டங்கள் குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி ரூ.292.15 கோடியில் 170 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், ரூ.190.91 கோடி மதிப்பிலான 122 பணிகள் நிறைவடைந்துவிட்டன. ரூ.101.25 கோடி மதிப்பிலான 48 திட்டப் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழக அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, என்எல்சி இந்தியா நிறுவனத்திடமிருந்து கடலூர் மாவட்ட அறக்கட்டளைக்குரூ.427.81 கோடி பெறப்பட்டுள்ளது. என்எல்சி இந்தியா நிறுவனத்திடமிருந்து ஒட்டுமொத்தமாக பெறப்பட்ட ரூ.447.84 கோடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.292.15 கோடி (68.29சதவீதம்) ஒதுக்கீடு செய்யப்பட்டு,அதில் ரூ.278.16 கோடி (65.02சதவீதம்) நிதி கடந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x