

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்துக்கான வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதாதான் முடிவு செய்வார் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்தது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் வாக்காளர் களுக்கு அதிகளவு பணம் விநியோ கிக்கப்பட்டதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, அத்தொகுதி களில் தேர்தலை தள்ளிவைத்து ஆணையம் உத்தரவிட்டது. இரண்டு தொகுதிகள் தவிர 232 தொகுதிகளில் தேர்தல் மே மாதம் 16-ம் தேதி நடத்தப்பட்டது. பின்னர், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்தார்.
இந்த 3 தொகுதிகளுக்கும் நவம்பர் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 26-ம் தேதி தொடங்கி நவம்பர் 2-ம் தேதி முடிகிறது.
வேட்பு மனுத்தாக்கல் தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ளன. இந்நிலையில் திமுக சார்பில், விருப்ப மனு பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணிகளும் தொடங்கியுள்ளது. நாளை 20-ம் தேதி வரை மனுக்கள் பெறப்படுகின்றன.
ஆனால், கடந்த பொதுத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் இவற்றில் முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்த அதிமுக தரப்பில் வேட்பாளர்கள் தொடர்பான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். ஆனால், அவர் மருத்துவமனையில் இருந்தபோது தான், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது. எனவே, இப்போதும் அதே போல் வேட்பாளர்கள் அறிவிக்கப் படுவார்கள் என அதிமுக நிர்வாகி கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, அதிமுக ஊடக தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி கூறுகையில், ‘‘தற்போது முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்னும் கொஞ்ச நாட்கள் அவர் மருத்துவமனையிலேயே தங்கியிருப்பார். விரைவில் வீடு திரும்புவார். இடைத்தேர்தல் வேட்பாளர்களை முதல்வர்தான் அறிவிப்பார். வேட்பாளர்கள் பெயர் விரைவில் வெளியாகும்’’ என்றார்.
மற்றொரு செய்தித் தொடர்பாளர் கோ.சமரசத்திடம் கேட்டபோது, ‘‘வேட்பாளர்களை முதல்வர்தான் முடிவு செய்வார். அவரை மீறி எதுவும் நடக்காது’’ என்றார்.
மற்றொரு மூத்த நிர்வாகி கூறுகையில், ‘‘வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். முதல்வர்தான் முடிவு செய்வார்’’ என்றார்.
முதல்வர்தான் வேட்பாளர்களை முடிவு செய்வார் என நிர்வாகிகள் கூறிவரும் நிலையில், வேட்பாளர் கள் யார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதில்,திருப்பரங்குன்றம் தவிர, அரவக்குறிச்சி தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வி.செந்தில்பாலாஜி, தஞ்சையில் எம்.ரெங்கசாமி ஆகியோருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு உள்ளது. திருப் பரங்குன்றத்தைப் பொறுத்தவரை, மறைந்த சீனிவேலுவின் குடும்பத் தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.