Published : 10 Aug 2022 04:05 AM
Last Updated : 10 Aug 2022 04:05 AM

நொய்யலாற்று வெள்ளப்பெருக்கில் மூழ்கிய நல்லம்மன் கோயில்: ஆற்றங்கரையில் பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு

திருப்பூர்

நொய்யலாறு வெள்ளப்பெருக்கில் நல்லம்மன் கோயில் நீரில் மூழ்கிய நிலையில், ஆற்றங்கரையில் பொங்கல் வைத்து நேற்று கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது.இந்த தடுப்பணை, கொங்கு சோழர்கள் காலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. அணை கட்டும்போது, நடுவே உடைந்து கொண்டே இருந்ததால், உடையும் பகுதியில் நல்லம்மன் என்ற சிறுமி உயிர் தியாகம் செய்ததாகவும், அதன்பிறகு அந்த அணை கட்டப்பட்டு வலுவாக இருப்பதாகவும் கூறப்படுவது ஐதீகம்.

நல்லம்மனின் தியாகத்தை போற்றும் வகையில், ஆடிப்பெருக்குக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமையில், ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடத்துவது சுற்றுவட்டார கிராம மக்களின் வழக்கம். இந்நிலையில், நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ளவெள்ளப்பெருக்கு காரணமாக அணை நடுவிலுள்ள நல்லம்மன்கோயில் முழுமையாக மூழ்கியது.

நடப்பாண்டில் பொங்கல் விழாவை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆற்றங்கரையில் பொங்கல் வழிபாடு நடத்தமுடிவு செய்தனர். அதன்படி, பச்சைதென்னை ஓலையில் குடிசை அமைத்து, நேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

இதுதொடர்பாக நல்லம்மனை வழிபட வந்த பக்தர்கள் கூறும்போது, “சின்னியகவுண்டன்புதூர், சின்னாண்டிபாளையம், புத்தூர், ராம் நகர் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கு நல்லம்மன்தான் குலதெய்வம். நொய்யலில் வெள்ளம் செல்வதால் கோயில் மூழ்கியுள்ளது. கோயிலுக்கு எதிரே கரையில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறோம். ஆண்டுதோறும் இந்த நாளில் கூடி, பொங்கல் படையலிட்டு வழிபாடு செய்து மகிழ்வோம்” என்றனர்.

இதேபோல, திருப்பூர் மாநகரில்நொய்யல் ஆறு தூர்வாரப்பட்டிருந்த நிலையில், தடையின்றி அதிகளவில் தண்ணீர் சென்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என மாநகர மக்கள் பல்வேறு தரப்பினரும் கண்டு ரசித்தனர்.

இதுதொடர்பாக மாநகர மக்கள் கூறும்போது, “திருப்பூர் மாநகருக்குள் அமைந்துள்ள நொய்யல் ஆறு தூர்வாரப்படாமல் இருந்தால், தண்ணீர் சரியாக செல்ல முடியாத நிலை ஏற்படும். தற்போது நொய்யல்தூர்வாரப்பட்ட நிலையில், பார்க்கவேஅழகாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு புதுவெள்ளம் பாய்வதை கண்டு ரசிக்கிறோம்.

நொய்யல் ஆறு மாசுபடாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மங்கலம் அருகே மூழ்கியுள்ள நல்லம்மன் கோயில். (அடுத்த படம்)நல்லம்மன் தடுப்பணை அருகே ஆற்றங்கரையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய கிராம மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x