குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க 48 பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸார்

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க 48 பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸார்
Updated on
1 min read

சென்னை: குழந்தைகள் பாலியல் குற்றங்களால்பாதிக்கப்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு நேரில் சென்று போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்கள் பாதுகாப்பு, பெண்கள், சிறுவர், சிறுமியர் மற்றும் மூத்தகுடிமக்களின் பாதுகாப்பு மற்றும்நலனுக்காக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னையில் ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 48 பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

இம்முகாம்களில் 18 வயதுக்குஉட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும்பாலியல் சீண்டல்கள் குறித்தும், இதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், ‘குட் டச்' மற்றும் ‘பேட்டச்' குறித்தும், பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டால் தங்களது பெற்றோர்அல்லது ஆசிரியரிடம் உடனே தெரிவிப்பது குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு போலீஸார் அறிவுறுத்தினர்.

புகார் கூற அறிவுரை

இந்த விழிப்புணர்வு முகாம்களில் 13,878 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். தேவைப்பட்டால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் மாணவிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in