Published : 09 Aug 2022 07:04 PM
Last Updated : 09 Aug 2022 07:04 PM

எஸ்சி, எஸ்டி ஊராட்சித் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்க: திருப்பூர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின கிராம ஊராட்சித் தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை உறுதிப்படுத்திட வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு திருப்பூர் மாவட்ட தலைவர் ச.நந்தகோபால், மாவட்ட செயலாளர் சி.கே.கனகராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்துக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ''நாட்டின் 75-ம் ஆண்டு பவளவிழா கொண்டாட்டங்களுக்கு நாம் தயராகி வருகிறோம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளில் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த கிராம ஊராட்சித் தலைவர்களை தேசியக் கொடியேற்ற விடாமல், தடுக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் சில இடங்களில் நிகழ்ந்தன. இது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில், வரும் 15-ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை அனைத்து தரப்பினரும் தன்னெழுச்சியாக கொண்டாட தயராகி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டியல் இனத்தை சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், பொறுப்பு வகிக்கும் 60 கிராம ஊராட்சிகளிலும், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று ஊராட்சிமன்ற அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றுவதை உறுதிப்படுத்திட காவல்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறைகளுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவிட வேண்டும்.

அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை மறுக்கும் நபர்கள், அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சித் தலைவர்களின் உறவினர்களோ (அ) வேறு நபர்களோ அவர்களின் பணிகளில் தலையீடு செலுத்துவதை தடுத்து நிறுத்திட, கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x