Published : 09 Aug 2022 04:27 PM
Last Updated : 09 Aug 2022 04:27 PM

“போட்டி அரசியலில் ஆளுநர் ஆர்.என்.ரவி... ரஜினி கூறியதே ஆதாரம்” - கி.வீரமணி

சென்னை: "ரஜினிகாந்த் 'அரசியல் பேசினோம்; வெளியிட முடியாது' என்பது ஆளுநர் மீதான அரசியல் தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு தக்க ஆதாரமாக அமைந்துள்ளது" என்று திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தின் ஆளுநராக ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஓராண்டிலேயே இந்தியாவின் (நம்பர் ஒன்) முதல் முதல்வர் என்ற புகழ்பெற்று வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு எதிராக, கடந்த பல மாதங்களாகவே - அதன் கொள்கைத் திட்டங்கள் - இவற்றிற்கு முற்றிலும் எதிர்மறையான கருத்தை நாளும் பரப்பி ஒரு போட்டி அரசாங்கத்தினையே நடத்தி வருகிறார்.

உச்ச நீதிமன்றத்தால் குட்டுப்பட்ட ஆளுநர், பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தில் குட்டுப்பட்டது போன்ற கருத்துரைகளுக்குப் பின்னரும்கூட, அந்தப் போக்கை கைவிடவில்லை. ராஜ்பவன் அலுவலகத்தை ஆர்எஸ்எஸ் தமிழகப் பிரிவின் தலைமை இடம் போலவே கருதி, தொடர்ந்து அறிக்கை விடுவது, சனாதனத்தின் பெருமைகள்பற்றிப் பேசுவது, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் போட்டு, தனது அரசமைப்புச் சட்டக் கடமைகளை சரிவர நிறைவேற்றாதது உள்பட பல வகையிலும் ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் செய்து வருகிறார்.

ஆளுநரின் தேவையற்ற பேச்சுகள்: தேவையற்ற முரண்பாடான வகையில் தமிழக மக்கள் வரிப் பணத்தில், வசதிகளுடன் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கொள்கை பிரச்சாரகராக நாளும் செயல்பட்டு வருகிறார் என்ற கண்டனங்கள் தமிழகத்தின் பல எதிர்க்கட்சித் தலைவர்களால் அவ்வப்போது கூறப்பட்டும், அதுபற்றி அலட்சியமே காட்டுகிறார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அவரைச் சந்தித்து அரசியல் பேசினோம்; ஆனால், அதை வெளியிட முடியாது என்று கூறியுள்ளது, மற்ற தலைவர்கள் ஆளுநர் மீது சாட்டிய குற்றச்சாட்டுக்கு தக்க ஆதாரமாகவும் அமைந்துள்ளது.

அனைத்துக் கட்சிகளின் கடமை: தமிழகத்தின் அனைத்து கூட்டணி மற்றும் அரசியல் சட்ட மாண்புகளைக் காக்க விரும்புவோர், முற்போக்காளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து, அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கவும் முன்வரவேண்டும்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x