

சென்னை: “சென்னையில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டு தண்ணீர் தேங்காது” என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி இன்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உட்புறத்தில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை விட பிரதான சாலைகளில் உள்ள இணைப்பு கால்வாய் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக, தண்ணீர் தேங்கும் பகுதிகளில் பணிகளை விரைந்து முடிக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் தொடர்பாக ஒரு வாரத்தில் மூன்று முறையாவது ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மழைக்காலத்தில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டு தண்ணீர் தேங்காது. அதற்கான முயற்சியில் மாநகராட்சி தீவிரமாக உள்ளது. இதுவரை வெவ்வேறு திட்டங்களில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளில் 50 - 70 % வரை பணி நிறைவு பெற்றுள்ளது.
மழைக்காலத்திற்குள் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் இரண்டு முறையாவது முதல்வர் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்பாக கேட்டறிந்து ஆய்வு செய்கிறார்" என்று அவர் கூறினார்.