மாநில அளவில் பட்டு, பருத்தி ரகங்களில் சிறந்த நெசவாளர், ஏற்றுமதியாளருக்கு விருது: காசோலை, கேடயம், சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

மாநில அளவில் பட்டு, பருத்தி ரகங்களுக்கான 2021-22-ம் ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு உயர்த்தப்பட்ட பரிசுத் தொகைக்கான காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலர் இறையன்பு, துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துறை ஆணையர் த.பொ.ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில அளவில் பட்டு, பருத்தி ரகங்களுக்கான 2021-22-ம் ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு உயர்த்தப்பட்ட பரிசுத் தொகைக்கான காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலர் இறையன்பு, துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துறை ஆணையர் த.பொ.ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Updated on
1 min read

சென்னை: மாநில அளவில் பட்டு, பருத்தி ரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கைத்தறி, விசைத்தறி, துணி நூல்பிரிவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும், நெசவாளர்களின் நலனுக்காகவும் தமிழக அரசுபல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2021-22-ம்ஆண்டுக்கான கைத்தறி, துணிநூல் துறை மானியக் கோரிக்கையில் ‘மாநில அளவிலான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மாநில அளவிலான பட்டு ரகத்துக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது, பருத்தி ரகத்துக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது, முதல் பரிசுக்கான பரிசுத் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், 2-ம் பரிசை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், 3-ம் பரிசை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து, 2021-22 ஆண்டில் மாநில அளவில் பட்டு ரகத்துக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசை திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் பி.கே.முருகனுக்கும், 2-ம் பரிசைகாஞ்சிபுரம் அறிஞர் அண்ணாபட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஏ.ஞானசுந்தரிக்கும், 3-ம் பரிசை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எஸ். இளங்கோவுக்கும் முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

அதேபோல பருத்தி ரகத்தில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசை மகாகவி பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஜி.டி.சரவணனுக்கும், 2-ம் பரிசை சிவசக்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் டி.ஆர்.பாலனுக்கும், 3-ம் பரிசை மோதிலால் நேருகைத்தறி நெசவாளர் கூட்டுறவுசங்க உறுப்பினர் கே.சந்திரலேகாவுக்கும் வழங்கினார்.

இந்த 6 விருதாளர்களுக்கும் ரூ.20 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார்.

இதுதவிர, சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளருக்கான முதல் பரிசுசென்னை - அம்பாடி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கும், 2-ம் பரிசுகோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கும், 3-ம் பரிசு ஈரோடு - சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலர் இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி துறை ஆணையர் த.பொ.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in