

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்த உடனே சிறுவனின் சிகிச்சைக்காக முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அட்டையை கிருஷ்ணகிரி ஆட்சியர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் ஆட்சியர் ஜெய சந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. இதில், அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 251 மனுக்களை பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் பெற்றார். மேலும், இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தார்.
மேலும், ஊத்தங்கரை பாம்பாறு அணை இலங்கை தமிழர் முகாமில் வசித்து வரும் பெயின்டர் செல்வகுமார் என்பவர் தனது மகன் ரோபின்சனின் (10) உடலில் ஏற்பட்டுள்ள கட்டிகளை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கக் கோரி மனு அளித்தார். அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து காப்பீட்டு திட்ட அட்டையை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்யலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சையத்அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.